காவிரி கடைமடையான நாகை மாவட்டம் இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர்கள் மற்றும் விதை நெல்கள் தூவியும், கும்மியடித்தும் விவசாயிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி டெல்டா மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்து அங்கிருந்து கடந்த 31-ம் தேதி நாகை, திருவாரூர் மாவட்ட பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது. கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து பாண்டவையாற்றின் மூலம் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான கீழையூர் ஒன்றியம் இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் காவிரி வே. தனபாலன் தலைமையில் தடுப்பணை க்கு மலர் மாலை அணிவித்து, மலர் மற்றும் விதை நெல்தூவியும் வரவேற்றனர். தொடர்ந்து தீபாரதனை எடுத்தும்,சூரிய பகவானை வழிபட்டு விவசாயிகள் செழிக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து காவிரி நீர் வந்ததை வரவேற்கும் பொருட்டு பெண்கள் கும்மி பாட்டு பாடி, பட்டாசு வெடித்து பட்டாசு வரவேற்றனர். மேட்டூரில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் 18 லட்சம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய முடியும் என மகிழ்ச்சியை தெரிவிக்கும் விவசாயிகள் தண்ணீர் திறந்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.