தஞ்சாவூர்: பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி நவம்பர் 9ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தஞ்சையில் நடைபெற்ற அனைத்து கட்சி இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சையில் செயல்படும் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயினுல் ஆப்தின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இஸ்ரேல் அரசு, அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது சர்வதேச போர் விதிமுறைகளையும் மீறி,தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசி குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களை கொன்று குவித்து வருகிறது.
பாலஸ்தீனத்தை காசா நகரத்தை தரைமட்டமாக்கியும், அவர்கள் குடிக்க தண்ணீரும் ,உணவும், மருத்துவம் இன்றி பாலஸ்தீனர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆதரவாக செயல்பட்ட லெபனான்,ஈரான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீதும் கடுமையான போரை தொடுத்து வருகிறது. அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை முழுமையாக அபகரிக்க இஸ்ரேல் அமெரிக்க வல்லரசுகள் சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக, வர்த்தகத்திற்கு ஏதுவாக புதிய கால்வாயை உருவாக்கவும், எண்ணெய்கிணறுகள் தோண்டுவதற்கும் தொலைநோக்கு திட்டத்துடன் அரபு நாடுகளை குறிவைத்து தாக்கி வருவது கண்டனத்திற்குரியது.
பாலஸ்தீன, அரபு நாடுகள் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய அரசையும், ஐநா மன்றத்தையும் வலியுறுத்தி வருகிற நவம்பர் 9ஆம் தேதி தஞ்சையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. நடைபெற இருக்கும் பேரணி, பொதுக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜனநாயக,முற்போக்கு இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநில பொதுச் செயலாளர் கசி.விடுதலைக்குரன், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் அப்துல்லா, தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, இந்திய பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.அருணாச்சலம், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாநகர செயலாளர் ஆலம்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் எஸ்.அபுசாலி, எம்.இப்ராஹிம் ஷா, எம்.சுப்புராயன், ஏ.ஜோசப்சகாயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.