தஞ்சாவூர்: நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர்,  மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் சாய்பாபா நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்றது.


நாட்டின் தலைசிறந்த இடதுசாரி சிந்தனையாளரும், மகத்தான மனித உரிமைப் போராளியும், டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆங்கிலப் பேராசிரியருமான தோழர் சாய்பாபா மறைவிற்கு இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்றது. மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பேராசிரியர் சாய்பாபாவின் செயல்பாடுகள், நினைவுகளைப் பற்றி பேசியதாவது:


பேராசிரியர் சாய்பாபா கடந்த 13ம் தேதி இரவு 8 மணிக்கு இயற்கை எய்தினார். அவர் 1967ம் ஆண்டு அமலாபுரம் என்னும் ஆந்திர மாநிலச் சித்தூரில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் கடுமையான இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு கைகளால் தவழ்ந்து, தவழ்ந்து நடமாடியவர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்திலேயே மண்டல் குழுவுக்கு ஆதரவாகவும், எதிராக போராடியவர்களை அம்பலப்படுத்தியும் போராட்டக் களத்தில் நின்றவர். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பழங்குடி மக்கள்,  தலித் மக்கள், சிறுபான்மையினர் இவர்களுடைய நலனுக்காக போராடிய மகத்தான மனித உரிமைப் போராளியாவார்.


இவர் மாவோயிச தீவிரவாத அமைப்புகளும் தொடர்புடையவர் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி அவர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் , தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது மத்திய அரசு. சிறையில் கொடிய அடக்குமுறைக் கொடுமைகளுக்கு உள்ளானார். 90 சதவீத விழுக்காடு ஊனமுற்ற அவர் சக்கர நாற்காலிலேயே தன்னுடைய வாழ்வை நடத்திக் கொண்டு வந்தார். இவ்வளவு பெரும் ஊனம் இருந்த போதும் தளராது மக்களுக்காக பேசி வந்தார். மார்க்சியத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட ஒரு போராளியாக வாழ்ந்தவர்.


அவர் கொடிய தீவிரவாதியை போல தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தாயாரின் மரணத்திற்குக் கூட விடுப்பு அளிக்க மறுத்தது நீதிமன்றம். அவர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இருந்த போதும் அதற்கு உரிய சிகிச்சைகள் சிறையில் மறுக்கப்பட்டன. இத்தனைக்கும் பிறகும் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களின் விளைவாக சர்வதேச அளவில் அவருடைய கைதுக்கு எதிரான கண்டனங்கள் வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டு ஆறு மாதங்களிலேயே அவர் மரணம் அடைந்திருக்கிறார்.


சாய் பாபா அவர்கள் ஒரு மனித உரிமை போராளி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளர்,கவிஞர். இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கம் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பழங்குடி, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் தங்களின் வலிமையான குரல் ஒன்றை இழந்திருக்கிறது. அனைவரின் சார்பில் பேராசிரியர் சாய் பாபாவுக்கு வீர வணக்கமும்,  புகழஞ்சலியும் செலுத்துகிறோம். பேராசிரியர் சாய்பாபாவின் செயல்பாடுகளும், சிந்தனைகளும் புரட்சியாளர்கள் ஜனநாயக சக்திகள் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், நிர்வாகி என்.குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சு.பழனிராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன், மகஇக மாநில இணைச் செயலாளர் ராவணன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாநகரச் செயலாளர் ஆலம்கான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் அ.ரஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அ.ரெ.முகிலன், எழுத்தாளர் சாம்பான், பொறியாளர் ஜோ.கென்னடி, பேராசிரியர் வி.பாரி, வழக்கறிஞர் அக்ரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார்,, புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன், சமூக ஆர்வலர் பூதலூர் அற்புதராஜ், திப்பு அம்பேத்கர் பெரியார் கூட்டமைப்பு நலசங்க நிர்வாகி வல்லம் நியாஸ் அகமது மற்றும் அனைத்து இயக்க நிர்வாகிகள் தேவா, சரவணன், கரிகாலன், விசிறி சாமியார் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.