தஞ்சாவூர்: வடகிழக்கு பருவமழையை பாதிப்பு இல்லாதவாறு எதிர்கொள்வது குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2024. ஐ எந்தவித பாதிப்புகளும் இல்லாதவாறு நடவடிக்கை எதிர்கொள்வது தொடர்பாக தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் தொடர்புடைய அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாளர்கள் தொடர்ந்து பணி புரிந்து வருகின்றனர் எனவும், பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகள், கோரிக்கைகளை கட்டணமில்லா தொலைபேசி எண்-1077, தொலைபேசி எண் 04362-230121, வாட்ஸ்அப் எண்-93450 88997 என்ற எண்களை பயன்படுத்திக் தெரிவித்திடலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பலநோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 50 படகுகள். 67 கனரக இயந்திரங்கள். 378 அறுவை இயந்திரங்கள், 68 மரம் வெட்டும் இயந்திரங்கள், 72 ஜெனரேட்டர்கள், 42 தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள், 91985 மணல் மூட்டைகள், 30755 தடுப்பு கம்புகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது. 4550 முதல் நிலை பணியாளர்கள் மற்றும் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் 300 முதல்நிலை பணியாளர்கள் ஆகியோர் தயார்நிலையில் உள்ளனர்.
தீயணைப்புத்துறையினரும் ரெடியாக இருக்காங்க
வடகிழக்கு பருவமழையின்போது மீட்புப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தீயணைப்பு துறையில் inflatable rubber boats, life buoys, life jackets and rubber dinghies போன்ற உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளது. வெள்ளக்காலங்களில் பயன்படுத்திட ஏதுவாக தேவையான அளவில் மருந்துப்பொருட்கள், ஆம்புலன்சுகள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்கவும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அனைத்து கழிவு நீர் வாய்க்கால்களும் அடைப்புகள் ஏதுமின்றி கழிவு நீர் தேங்காதவாறு சுத்தம் செய்திட வேண்டும்.
அனைத்து பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு கீழ் உள்ள அடைப்புகள் சுத்தம் செய்திடவேண்டும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளவேண்டும் எனவும் தொடர்புடைய துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுக்கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், தங்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள், அலுவலகக் கட்டடங்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகள், பாலங்கள் மற்றும் மதகுகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளில் சேதமடைந்த மற்றும் பழுதடைந்த கட்டமைப்புகளை அடையாளம் கண்டறிந்து உடனடியாக அவற்றை பழுது நீக்கம் செய்திடவும், தேவையான நேர்வில் அப்புறப்படுத்திடவும் தொடர்புடைய துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தேவையான அளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் சேமித்து வைத்திடவும் தொடர்புடைய துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின்போது சரிந்து விழும் மின்கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்திடவும். சரிந்து விழும் மரங்களை அப்புறப்படுத்திடவும் தயார் நிலையில் இருக்குமாறு தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.