டெல்டாவில் மழை ஓய்ந்தது... நிறுத்தப்பட்ட தண்ணீரும் திறக்கப்பட்டது

டெல்டாவில் நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில், வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கி விட்டது.

Continues below advertisement

தஞ்சாவூர்: ஃபெங்கால் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை ஓய்ந்த நிலையில் இன்று மாலை முதல் பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

Continues below advertisement

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணை காலதாமதமாக கடந்த ஜூலை 28-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் ஜூலை 31-ம் தேதி முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் குறுவை சாகுபடியை தஞ்சை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் மேற்கொள்ளவில்லை. பம்ப்செட் விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடியை மேற்கொண்டு அறுவடையை முடித்தனர். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை, மேட்டூருக்கு வந்த தண்ணீர் ஆகியவற்றால் விவசாயிகள் நம்பிக்கை அடைந்து சம்பா, தாளடி சாகுபடியில் தீவிரமாக இறங்கினர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு, கடந்த நவ.15-ம் தேதியில் இருந்து கனமழை பெய்தது. குறிப்பாக தஞ்சை மாவட்டம் பூதலூர், சித்திரக்குடி, ஆலக்குடி, வல்லம், 8.கரம்பை உட்பட பகுதிகளில் சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு இந்த மழை பெரும் பயனை அளித்தது. மற்ற பகுதிகளில் டெல்டாவில் பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கியது. 

இதையடுத்து, பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் ஆறுகள் வாய்க்காலில் சென்றால், மழைநீர் வடிவதில் காலதாமதம் ஏற்படும், பயிர்கள் பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால், வயல்களில் தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கடந்த நவ.27-ம் தேதி முதல் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கான தண்ணீர் திறப்பது முழுமையாக நிறுத்தப்பட்டது. 
 
இந்நிலையில் டெல்டாவில் நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில், வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கி விட்டது. இதையடுத்து பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வினாடிக்கு காவிரியில் 208 கன அடியும், வெண்ணாற்றில் 202 கன அடியும், கல்லணைக் கால்வாயில் இருந்து 200 கன அடியும், கொள்ளிடத்தில் 712 கன அடியும் இன்று மாலையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக விவசாயப்பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது வயல்களில் மண்டியுள்ள களைகளை பறிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மழைநீர் தேங்கி நின்ற பகுதியில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக என்று பார்த்து அதற்கேற்ப உரம் தெளித்தல், பூச்சிக் கொல்லி அடித்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. தற்போது கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் விவசாயப்பணிகள் இன்னும் மும்முரம் அடைந்து விடும் என்பதால் விவசாயத் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயத் தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாக விவசாயப்பணிகள் ஏதும் இல்லாமல் மழையின் காரணமாக மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தோம். தற்போது மழை நின்றதால் களைப்பறித்தல், உரம் தெளித்தல் பணிகள் நடக்கத் தொடங்கி விட்டது. இனி தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பதால் சற்றே நிம்மதி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola