தஞ்சாவூர்: உரிய ரசீதுகளுடன் எம்சாண்ட், பி சாண்ட் ஏற்றி வரும் லாரிகளை கனிம வளத்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்யக்கூடாது என வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.


தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.


அப்போது தஞ்சை மாவட்டத்தில் செயற்கை மணல் (எம் சாண்ட்), ஜல்லி, சிப்ஸ் ஆகிய கனிமங்களை உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லும் லாரிகளை பிடித்து உரிமையாளர் மற்றும் டிரைவர்களை கைது செய்யும் நடவடிக்கை தவறானது என்று வலியுறுத்தி தமிழ்நாடு சாண்ட் லாரி உரிமையாளர்கள் அமைப்பு சார்பில் தலைவர் ராஜாமணி தலைமையில் தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.


அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதும் செயற்கை மணல் (எம். சாண்ட்) ஜல்லி, சிப்ஸ் ஆகிய கனிமங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து எடுத்துச் செல்லும் லாரிகளை பிடித்து ட்ரான்ஸ் சிட் பாஸ், வே பர்மிட் இல்லை என்று லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. கிரசர்களில் இருந்து செயற்கை மணல், ஜல்லி, சிப்ஸ் ஆகிய கனிமங்களை லாரிகள் எடுத்துச் செல்வதற்கு டிரான்ட்ஷிப் பாஸ், வே பர்மிட் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. முறையான பில் இருந்தால் போதுமானது என்று உத்தரவிட கோரி கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. 


இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவி ராஜபாண்டியன் விசாரித்து கடந்த 2006ம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் முறையான ரசீது இருந்தால் போதும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு பிறகு அனைத்து மாவட்டங்களிலும் ட்ரான்ஸ் சிட் பாஸ், வேபர்மிட் இல்லாமல் முறையாக கிரஷர்களில் வழங்கப்படும் பில் உடன் கனிமங்களை எடுத்துச் செல்லும் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதில்லை.


ஆனால் கடந்த 24ம் தேதி உரிய ரசீதுடன் எம் சாண்ட் மற்றும் ஏற்றி வந்த லாரியை தஞ்சாவூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் சோதனை செய்து டிரான்ஸ் சிட் இல்லாமல் திருடி செல்வதாக திருவையாறு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதே போல் கடந்த 28ம் தேதி திருவாரூரை சேர்ந்த லாரி இதே காரணத்தால் பிடிக்கப்பட்டு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2000 லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் எம் சாண்ட், பி சாண்ட் ஆகியவை தான் கட்டுமானத்திற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.


இந்நிலையில் முறையான ரசீதுடன் எம்சாண்ட் இயற்றியவரும் வரும் லாரிகளை பறிமுதல் செய்வது கண்டனத்திற்கு உரியது. இதுகுறித்து கனிம வளத்துறை இயக்குனருக்கு பதிவு தபாலில் மனு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று நடவடிக்கை மேற்கொண்டு லாரி உரிமையாளர்களை பாதிக்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.