தஞ்சாவூர்: எங்களின் படிப்பு விவசாயிகளுக்கு உதவணும். அதுதான் எங்கள் லட்சியம் என்று தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் மேற்கொண்ட ஆராய்ச்சி கண்டுபிடிப்பு வெற்றி பெற்று பாராட்டுக்களை குவித்து வருகிறது.
உணவளிக்கும் உங்களுக்காக எங்கள் கல்வி பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை மாணவிகள் அதிர்ச்சி அலை (Shock Waves) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தில் பயிர்கள் முளைக்க வைக்கும் கண்டுபிடிப்பு அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது. இந்த கண்டுபிடிப்பு தஞ்சையில் நடந்த நூலக கண்காட்சியில் அறிவியல் அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் இயற்கை விவசாயம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளிலும் விதைகளும், உரங்களும் தரமற்றதாகவே கிடைக்கின்றன. இதனால் மண்ணின் வளமும் கெடுகிறது. தரமான விதைகள் தான் இயற்கை விவசாயத்திற்கு வழிவகுக்கும் முதல் படியாகும்.
விவசாயத்திற்கு தண்ணீர் மற்றும் உரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமானவை விதைகள்தான். இவை தரமானதாக இருந்தால்தான் விவசாயிகள் அதிக மகசூலை எடுக்க முடியும். பாடுபட்டு உழைக்கும் உழவர்க்கு கூடுதல் மகசூலே மகிழ்ச்சியை அளிக்கும். செலவுகள் குறைந்து மகசூல் அதிகரித்தால் விவசாயம் செய்யப்படும் பரப்பளவும் அதிகரிக்கும். அதோடு வெயில் மற்றும் மழை என இயற்கைப் பேரிடர்களைத் தாங்கி பயிர்கள் வளரவும் தரமான விதைகள் அவசியமானது. தற்போதைய சூழலில் விதைகளின் விலை தான் அதிகமாக உள்ளன. இருப்பினும் தரமற்ற விதைகளும் இதில் கலப்படம் ஆகிறது. இதனால் விவசாயிகள் நிலை மிகவும் பரிதாபம் ஆகிறது.
விதைகள் எல்லா விதமான தட்பவெப்பநிலைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் நல்ல மகசூலைக் கொடுக்க வேண்டும். ஒரே அளவுள்ள சீரான விதைகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். மேலும் இந்த விதைகள் விவசாயிகளுக்கும், விற்பனைக்கும் ஏற்றதாக இருப்பது நல்லது. இப்படி விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ள விதைகள் உள்ளன. இதில் நெல் சாகுபடி காலம் 120 நாட்கள், 130 நாட்கள், 150 நாட்கள், அதிகபட்சம் 160 நாட்கள் என்று உள்ளன. இதற்கு தண்ணீர் தேவையும் அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறையை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவிகள் கா.சத்யா, கோ.மிருணாளினி, கு.கிருபா சி.ஸ்ருதி, கா.இலக்கியா அடங்கிய மாணவிகள் குழுவினர் அதிர்ச்சி அலைகளை நன்முறையில் பயன்படுத்தி விவசாயிகளுக்கு உபயோகப்படும் வகையில் விதைகளின் முளைப்பு திறனை குறுகிய காலத்திற்கு கொண்டு வருவது குறித்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர்.
மாணவிகள் சத்யாவின் தந்தை காளிதாஸ் விவசாயி, தாய் சரோஜா, மிருணாளினியின் தந்தை கோகுல கண்ணன் தையல் கலைஞர், தாய் பூமா. கிருபாவின் தந்தை குமார் வெல்டர், தாய் சத்யா, ஸ்ருதியின் தந்தை செந்தில்குமார் ஆசிரியர், தாய் கிருஷ்ணவேணி, இலக்கியாவின் தந்தை கணேசன் விவசாயி, தாய் நிலா. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இந்த மாணவிகளுக்கு பல்வேறு இயற்கை இடர்பாடுகளை தாண்டி உலகிற்கே உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு நாமும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக அதன் விளைவாக அதிர்ச்சி அலைகளைக் கொண்டு மேற்கண்ட கண்டுபிடிப்பை செய்து முடித்துள்ளனர்.
மாணவிகளின் இந்த உயரிய செயல்பாட்டிற்கு உறுதுணையாக கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்பீட்டர் ஊக்கம் அளிக்க, இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் அனுராதா, உதவி பேராசிரியர் முனைவர் சினேகா ஆகியோர் வழிகாட்ட தஞ்சை ஷிவ்விட் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர், முனைவர் சோ.ஸ்ரீநாத் உடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அவர்களின் ஆய்வக உதவியை பெற்று குறுகிய நாட்களில் விதை முளைவிடும் ஆய்வினை மேற்கொண்டு தங்களின் கண்டுபிடிப்பை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
இந்தக் குறுகிய கால விதை முளைத்தல் என்பது அதிர்ச்சி அலைக்கு விதைகளை உட்படுத்துவதால் ஏற்படுகிறது. அதிர்ச்சி அலை என்பது அதீத காற்றழுத்த வேறுபாட்டினால் உருவாகும் மெல்லிய படுகையாகும். அதிர்ச்சி அலைகள் ஒலியின் வேகத்தை விட அதிகமாக பயணிக்கக் கூடிய போர் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளின் மேற்புறத்தில் உருவாகும். மேலும் குண்டு வெடிப்புகள் மற்றும் புவி அதிர்வின் போதும் உருவாகக்கூடியது. இவை மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் பண்புகள் கொண்டது. ஆனால் தீமை விளைவிக்கும் இந்த அதிர்ச்சி அலைகளை கட்டுப்பாட்டுடன் அதிர்ச்சி அலைகுழாய்களில் உருவாக்கும் போது அதன் அதீத ஆற்றலை பயனுள்ளதாக மாற்ற முடியும். இந்த அலைகளானது விதையில் ஊடுருவும் போது விதைகளின் முளை விடும் திறனும், வளர்ச்சி வேகமும் அதிகரிக்கிறது. மேலும் இப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வெந்தய விதைகளின் வாயிலாக முளைத்த செடிகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது அதில் புரதச்சத்து அதிகரித்து காணப்பட்டது. அதில் உள்ள மற்ற சத்துகள் அளவுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விதைகளை விரைவில் முளைக்க வைக்கும் கண்டுபிடிப்பை இம்மாணவிகள் குழு சிறப்பான முறையில் செய்து முடித்துள்ளனர். மாணவிகள் உளுந்து மற்றும் வெந்தய விதைகளை தங்களின் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதற்காக கம்ப்ரஸரால் அழுத்தப்பட்ட காற்றினை பயன்படுத்தி மெலிதான பட்டர் பேப்பரை உடைப்பதன் மூலம் அதிர்ச்சி அலையை குழாயில் உருவாக்குகின்றனர். குழாயின் மறுமுனையில் விதைகளை ஒரு பையில் வைத்து இறுகக் கட்டி அதிர்ச்சி அலைகளை அதன் மீது செலுத்துகின்றனர். அப்பொழுது ஏற்படும் ஒலி அதிர்வானது விதைகளில் முழுவதுமாக பரவுகிறது. இதனால் உதாரணத்திற்கு ஐந்து நாட்களில் முளைக்கும் திறன் கொண்ட விதைகள் ஒரே நாளில் முளைத்து வருகின்றன. இந்த கண்டுபிடிப்பால் விதைகளில் எவ்வித மரபணு மாற்றமும் ஏற்படுவதில்லை இயற்கையான முறையில் விதைகளின் முளைப்புத் திறனை முன் கூட்டியே செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
தற்போது உளுந்து மற்றும் வெந்தய விதைகளை வைத்து மாணவிகள் இந்த கண்டுபிடிப்பை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். மேலும் நெல், சோளம், கடலை உட்பட விவசாயிகள் பயிரிடும் அனைத்து விதமான சாகுபடி பயிர்களுக்கான விதைகளையும் விரைவிலேயே முளைப்புத்திறன் கொண்டு வருவதற்கான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விதைகளை பயிரிடும் போது கிடைக்கும் பயன்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில் விதைகள் துரிதமான முளைப்புத் திறனை பெறுகிறது. ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கையான காற்றைக் கொண்டு அதிர்ச்சி அலைகளை உருவாக்கி மரபணு மாற்றம் இல்லாமல் பயிரின் முளைப்புத்திறன் முன்கூட்டியே வந்து விடுகிறது. நீண்ட கால பயிர்கள் குறுகிய காலத்தில் முளைக்க இந்த கண்டுபிடிப்பு உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் சிறந்த பயனை ஏற்படுத்த முடியும். செலவினம் மற்றும் கால நேரம் வெகுவாக குறைகிறது. இந்த சிறப்பு வாய்ந்த அதிர்ச்சி அலை தொழில்நுட்பம் வாயிலாக உருவான இந்த கண்டுபிடிப்பு எந்த காலத்திலும் மக்களின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
இதுகுறித்து மாணவிகள் குழு கூறுகையில், விதைகளின் முளைப்புத் திறனை முன்கூட்டியே கொண்டு வருவதற்கான இந்த கண்டுபிடிப்பை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக ஆய்வகத்தின் உபகரணங்களை கொண்டு நாங்கள் செயல்முறைப்படுத்தினோம். முதலில் வெந்தய விதைகளை பயன்படுத்தினோம். இயல்பாக 8 முதல் 9 நாட்களுக்குள் முளைக்கும் வெந்தயம் 28 மணி நேரத்திற்குள் முளை விட்டது. இதேபோல் உளுந்து 5 நாட்களில் முளைக்கும் என்றால் விரைவாக ஒன்றரை நாட்களுக்குள் முளைப்பு திறனை எட்டியது. இனி வருங்காலம் விவசாயத்தின் முன்னேற்ற காலம்தான். அதனால் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அதிக செலவில்லாமல் விதைகளின் முளைப்பு திறனை முன்கூட்டியே வருமாறு இந்த கண்டுபிடிப்பை செய்துள்ளோம். இதற்கு எங்களின் கல்லூரி முதல்வர், துறை பேராசிரியர், உதவி பேராசிரியர், ஷிவ்விட் ஆராய்ச்சி மையத்தினர் ஆகியோரது வழிகாட்டுதலில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம் என்றனர்.
இந்த கண்டுபிடிப்பு விவசாயிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. எங்கள் கல்லூரி மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு விவசாயிகளுக்கு பெரும் உதவிகரமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கல்லூரி முதல்வர் ஜான்பீட்டர், இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் அனுராதா, உதவி பேராசிரியர் முனைவர் சினேகா ஆகியோர் தெரிவித்தனர்.