தஞ்சாவூர்: மத்திய அரசாங்கம் கொண்டு வந்த புதிய வாகன சட்ட மசோதாவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாய்நாடு அனைத்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றார். அந்த வகையில் தாய்நாடு அனைத்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தலைவர் விஜயகுமார், செயலாளர் உமா மகேஸ்வரன், பொருளாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமையில் வந்த 25க்கும் அதிகமான ஓட்டுனர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


மத்திய அரசு புதிய வாகன சட்ட மசோதாவை (ஹிட் அண்ட் ரன்) இயற்றியுள்ளது. இந்த சட்டம் வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே ஓட்டுனராகிய எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விபத்து நடந்த இடத்தில் இருக்கும் ஓட்டுநரை மக்கள் தாக்குவதால் அந்த இடத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே அவர் தலைமுறைவாகிறார். ஓட்டுநரை தாக்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.


விபத்துகளை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். இந்தியா முழுவதும் பயணம் செய்யக்கூடிய ஓட்டுனர்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் ஓட்டுநர் அவசர உதவி எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆன்லைன் மூலம் அபராத தொகை வசூல் செய்யக்கூடாது. வாகனத்தின் பதிவு சான்று, வாகனத்தின் காப்பீடு சான்று, ஓட்டுநர் உரிமம் ஓட்டுனர் சீருடை இவை அனைத்தும் சரியாக இல்லை என்றால் அந்த வாகனத்தின் பதிவு எண் ஓட்டுனரின் கையொப்பமிட்ட ரசீதை வழங்கி அபராத தொகை வசூல் செய்ய வேண்டும். ஓட்டுனருக்கென்று தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும். இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் ஓட்டுனருக்கு ஓட்டுநர் தினம் என்று ஒரு நாளை அறிவித்து கௌரவப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதேபோல் தஞ்சாவூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சுந்தர வடிவேலு என்பவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


2023-24 பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை சுமார் 42 கிராமங்களைச் சார்ந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. விவசாயிகள் பதிவு செய்த வங்கி கணக்குகள் அல்லாமல் அவர்களின் மற்ற வங்கி கணக்குகளில் பெரும்பாலான விவசாயிகளுக்கு வர வைக்கப்பட்டுள்ளது. இத்தொகை விவசாயிகளின் பழைய கடன்களில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.


எனவே பயிர் காப்பீட்டு தொகையை வங்கிகள் கடன்களுக்கு வரவு வைப்பதை தடுத்தும், வரவு வைத்த பணத்தை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆதாரின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்தி விவசாயிகள் பதிவு செய்த வங்கி கணக்கில் மட்டும் பணத்தை வர வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.