தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் புதிய புத்தகங்கள் பதிப்பிப்பதிலும், பழைய பிரதிகளை புதுப்பிப்பதிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. 


ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் சரஸ்வதி மகால் நூலகமும் ஒன்று. கி.பி. 1535 - 1675ம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த சரஸ்வதி மகால் நூலகம் உருவாக்கப்பட்டது. மராட்டியர் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட இந்த நூலகத்தின் வளர்ச்சியில் மன்னர் இரண்டாம் சரபோஜியின் பங்கு அதிகம்.


இங்கு சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த தமிழ், தெலுங்கு, மராத்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் போன்றவை உள்ளன. இதில் தமிழர்களின் பண்பாடு பற்றிய தகவல்கள், ஜோதிடம், சித்த மருத்துவக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.


பள்ளிக் கல்வித் துறை கீழ் இயங்கும் இந்நூலகத்தில் இதுவரை 600க்கும் அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ச் சுவடிகள் 7,700க்கும் அதிகமான தலைப்புகளில் இருந்தாலும், இதுவரை ஏறத்தாழ 300 நூல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் அச்சில் ஏறாத அரிய தகவல்கள், அற்புதமான மருத்துவக் குறிப்புகள், வானியல் தகவல்களும் ஏராளமாக உள்ளன. 


இந்த நூலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. முன்பு 48 பேர் பணிபுரிந்த இந்நூலகத்தில் தற்போது 12 முழு நேர ஊழியர்களும், 3 தற்காலிக பணியாளர்களும் என மொத்தம் 15 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.


முழு நேர ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் அந்த பணியிடத்திற்கு ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. நிதிப் பற்றாக்குறை காரணமாக 20-க்கும் அதிகமான தற்காலிக பணியாளர்கள் கடந்த 6 மாதங்களில் படிப்படியாக நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 ஓலைச்சுவடிகளில் உள்ள குறிப்புகளை அந்தந்த மொழியைச் சார்ந்த பண்டிதர்கள் எடுத்து எழுதி நூலாகப் பதிப்பிக்க வேண்டும். இதற்கு அச்சுக் கோர்ப்பவர்கள், அச்சகர்கள், புத்தகம் தைப்பவர்கள் என 10 பேர் மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றனர். ஆனால் அந்த பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் புதிய நூல்கள் பதிப்பு, மறுபதிப்பு போன்ற பணிகள் செய்வதற்கு ஆட்கள் இல்லை. இதனால் 250 தலைப்பிலான நூல்களுக்கான பிரதிகள் இல்லாத நிலையில், அவையெல்லாம் எப்போது மறுபதிப்பு செய்யப்படும் என்று ஆராய்ச்சியாளர்களும், வாசகர்களும் காத்துள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால் புதிய நூல்கள் மட்டுமல்லாமல், மறு பதிப்பு பணிகளில் மிகப் பெரிய தேக்கம் ஏற்படும் நிலை உள்ளது. 


இதற்கு நூலகத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறையே காரணம் என தெரிய வந்துள்ளது. தற்போது 40 பேர் ஓய்வூதியம் பெற்றுள்ளதால், ஊதியமும், ஓய்வூதியமும் வழங்குவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அரசின் நிதியுதவி ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 1.10 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போதைய நிலையில் ஆண்டுக்கு ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால்தான், இந்நூலகத்தில் நிலவும் ஆள்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


தேவையான பணியாட்கள் நியமிக்கப்படாவிட்டால் உலகப் புகழ்பெற்ற இந்நூலகம் முடங்கும் நிலை ஏற்படும் என்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து போதுமான நிதி மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுகோள் ஆகும்.