தஞ்சாவூர்: ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்தும் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் பரங்கிக்காய் சாகுபடி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


தஞ்சையில் இயங்கி வரும் உழவர் சந்தை


தஞ்சை உழவர் சந்தையில் 1 கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்தும் பரங்கிக்காயை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. விவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் 1999-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டது உழவர் சந்தைத் திட்டம். தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தை தமிழகத்திலேயே முதல் உழவர் சந்தையாகும். அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.


மருத்துவக்குணங்கள் நிரம்பிய பரங்கிக்காய்


இந்த உழவர் சந்தையில் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, தக்காளி, கருணைக்கிழங்கு, பூசணிக்காய், பரங்கிக்காய், கோவைக்காய், உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. காய்கறியின் விலை நிலவரம் தினமும் காலையில் நிர்ணயம் செய்யப்படும். மக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். ஆனால் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பரங்கிக்காய் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் யாரும் பரங்கிக்காயை ங்க ஆர்வம் காட்டவில்லை.


பரங்கியை பார்த்து விட்டு பாராமுகமாக செல்லும் மக்கள்


பரங்கிக்காயை பார்த்து விட்டு பாராமுகமாக பொதுமக்கள் செல்லும் நிலைதான் உள்ளது. இயற்கை உரங்கள் மூலம் விளைவித்த பரங்கிக்காயை  உழவர் சந்தைக்கு நேரடியாக கொண்டு வந்து விவசாயி ஒருவர் விற்பனை செய்து வருகிறார். ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்தும் கூட கடந்த 2 நாட்களில் ஒரு கிலோ பரங்கிக்காய் கூட விற்பனையாகாமல் அப்படியே குவிந்து கிடக்கிறது.


 


அப்போ விசேஷங்களில் இடம்பிடிக்கும் பரங்கிக்காய்... இப்போ?
 


முன்பெல்லாம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பரங்கிக்காய் கண்டிப்பாக இடம் பிடிக்கும். ஆனால் இன்றைக்கு பரங்கிக்காய் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்தும் வாங்குவதற்கு நாதியின்றி கிடக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தரும் பரங்கிக்காய் சாப்பிடுவது மழைக்காலத்திலும் குளிர் மற்றும் இருமலில் பெரும் நிவாரணம் அளிக்கும். பரங்கிக்காயில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை நோயை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, விரைவாக குணமாக்க உதவுகின்றன.


இரும்புச்சத்துக்கள் நிறைந்தது


பரங்கிக்காயில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இரும்பு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பது அனைவர்க்கும் தெரியும். இரும்புச்சத்து குறைவாக இருப்பதால் இரத்த சோகைக்கு வழிவகுக்கக்கூடும். இதனால், உடல்சோர்வு, தலைசுத்துதல், தோல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய நிலையில், பரங்கிக்காய் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய உதவுகிறது.


இறைச்சிக்கு முதலிடம்… பரங்கிக்காய்க்கு?


இதுகுறித்து இயற்கை விவசாயி தங்கராசு என்பவர் கூறியதாவது: பரங்கிக்காயின் மவுசு மக்களிடம் குறைந்துள்ளது. பொதுவாக பரங்கிக்காய் திருமண வீடுகளின் சமையலில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் தற்போது இறைச்சி தான் முக்கிய பங்காக இருக்கிறது. இதனால் பரங்கிக்காய் சைவ சமையலில் கூட இடம் பெறமால் உள்ளது. பரங்கிக்காயில் அதிக அளவிலான வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. பரங்கிக்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டும் அதிகளவில் நிறைந்துள்ளன. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சக்திவாய்ந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


பரங்கிக்காயில் இருக்கும் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. இது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டுகிறது. மருத்துவ குணங்களும் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. பல நாட்கள் இருந்தாலும் இந்த காய் ஒன்றும் ஆகாது. ஆனால் எலி போன்றவை கடித்துவிட்டால் வீணாகிவிடும். பரங்கிக்காய் விதைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக சத்து மிகுந்த பரங்கிக்காயை மக்கள் தவிர்த்து விடுகின்றனர்.


எதிர்பார்த்த விலை வேறு... விலையே போகாத நிலை வேறு


ஒரு கிலோ ரூ.30 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்த்தேன். உழவர் சந்தையில் கிலோ ரூ.20 என நிர்ணயம் செய்து உள்ளனர். ஆனால் கிலோ ரூ. 10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்தும் வாங்க மறுக்கிறார்கள். இதனால் விளைவித்த கூலி மட்டுமின்றி, பரங்கிக்காயை வயலில் பறித்து வாகனத்தில் சந்தைக்கு கொண்டு வந்த செலவுக்கு கூட விற்பனையாகவில்லை. இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.