தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய மேட்டு கட்டளை வாய்க்காலுக்கு தண்ணீர் விடவேண்டும். இல்லாவிடில் வரும் 3ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். 


இதில் இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 540 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய சம்பந்தப்பட்ட அவர்களிடம் வழங்கினார்கள். அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட இம்மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கர், உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன்  மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும் செங்கிப்பட்டி புதிய மேட்டு மேட்டு கட்டளை வாய்க்காலுக்கு இதுவரை தண்ணீர் வராததை கண்டித்து வரும் 3ஆம் தேதி அனைத்து தரப்பு விவசாயிகளும் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் வந்த விவசாயிகள் தெரிவித்து கலெக்டரிடம் மனு வழங்கினர்.


தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் உள்ளது . இதன் மூலம் 80 ஏரிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சேர்ந்த வயல்கள் சாகுபடிக்கு நீரை பெற்று வருகின்றன. சுமார் 20000 ஏக்கருக்கு மேல் இதில் வரும் தண்ணீரை நம்பி விவசாயிகள் சாகுபடி பணி செய்து வருகின்றனர்.


இந்நிலையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் இதுவரை புதிய மேட்டு கட்டளை வாய்க்காலுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.


இந்த புதிய மேட்டு கட்டளை வாய்க்காலுக்கு தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் நீர்வளத்துறை (ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் திருச்சி) ஆகியோரை மூன்று முறை சந்தித்து கோரிக்கை வைத்தும் இன்னும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை . கடந்த ஆண்டும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வராமல் விவசாயம் பொய்த்து போனது. இந்த ஆண்டு தண்ணீர் இருந்தும் நிர்வாக குளறுபடியால் இன்னும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வராமல், நாற்று போடாமல், விவசாயம் மறக்கடிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.


இந்த கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் செங்கிப்பட்டி பகுதியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு விவசாயிகளும் வரும் 3ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தரப்பில் தெரிவித்து தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


இதேபோல் மாரியம்மன்கோவில் ஊராட்சியினை மாநகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். 


அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த, மாரியம்மன்கோவில் ஊராட்சி பகுதியில் வாழும் மக்களாகிய நாங்கள். பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தும், வறிய நிலையிலும் அதிக அளவில் வசிக்கின்றோம். ஆகையால், மாரியம்மன்கோவில் ஊராட்சியினை. தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவு நிறைவேற்றப்பட்டால், 100 நாள் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2005) வேலை செய்யும் நாங்கள் வேலை இழந்து சிரமப்படும் சூழ்நிலையும், மேலும் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படும்.


ஆகையினால் எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மாரியம்மன்கோவில் ஊராட்சியினை, மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவினை மறுபரிசீலனை செய்ய, அய்யா அவர்கள் ஆவணம் செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.