தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மானம்பாடி நாகநாத சுவாமி கோயில் திருப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் 10 ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ளது. எனவே உடன் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழம் பெருமை வாய்ந்த கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் அருகே மானம்பாடி பகுதியில் திருக்கயிலாயம் என்ற நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி. 1014-1044ம் ஆண்டுகளில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் பெருங்கோயிலில் கூட இத்தகைய காட்சியைக் காண முடியாது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அடித்தளத்தில் தொடங்கி முதல் தளம் வரை கருங்கல்லை கொண்டு கட்டியிருந்தாலும், விமானத்தின் மேல் நிலைக் கட்டுமானங்களான கிரிவலம், சிகரம் செங்கற்களாலேயே எழுப்பப்பட்டுள்ளது. இதனால், காலப்போக்கில் அவை சிதைந்தும், மரங்கள் முளைத்தும் காணப்பட்டன.
நாகநாதசுவாமி சிவலிங்க திருமேனி
கருவறையும், முகப்பு மண்டபமும் இணைந்து திகழ்ந்த மூலக் கோயிலின் உள்ளே கைலாசமுடைய மகாதேவர் என்கிற நாகநாதசுவாமியின் சிவலிங்கத் திருமேனி அமைந்திருந்தது. தென்புறம் உள்ள கோஷ்டங்களில் பிச்சை உகக்கும் பெருமான், நடராஜர், கணபதி, தட்சிணாமூர்த்தி ஆகிய திருமேனிகள் உள்ளன. குறிப்பாக நடராஜர் திருவுருவம் செப்புச் சிலை போன்று காணப்படும். முதலாம் இராஜேந்திரன் சோழனின் 6 கல்வெட்டுகளும், முதலாம் குலோத்துங்கனின் 3 கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.
கும்பாபிஷேகத்திற்காக நிதி ஒதுக்கீடு
ஏறத்தாழ 1000 ஆண்டுகள் பழைமையான இந்த கோவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. மேலும் இந்த கோவிலை உரிய பராமரிப்பு செய்யப்படாததால், காலப்போக்கில் சேதமடைந்து, பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டில் சாலை விரிவாக்கத்துக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடிக்க முயற்சி செய்தது. ஆனால் கிராம மக்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், பக்தர்கள் எதிர்ப்பால் கோவிலை இடிக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர். ஆனால் சேதமடைந்த இந்த கோவிலை சீரமைத்து பக்தர்கள் வழிபாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு திருப்பணி செய்வதற்காக கடந்த 2013-ம் ஆண்டில் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
2014ல் பாலாலயம்
பின்னர், 2014-ம் ஆண்டில் திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் பணிகள் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் கடந்த 11 ஆண்டுகளாக பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கோவில் கற்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே விரைவில் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் கோரிக்கை
இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கூறுகையில், இக்கோயிலில், அறநிலையத் துறை வாயிலாக 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணமாக முதலாவது ஒப்பந்ததாரர் அடித்தளப் பணியுடன் நிறுத்திவிட்டுச் சென்றார். இதையடுத்து, வந்த இரண்டாவது ஒப்பந்ததாரருக்கு போதிய அனுபவம் இல்லாததால், இப்பழைமையான கோயிலை எப்படிச் சீரமைப்பது எனத் தெரியாமல், அடித்தளம் வரை எழுப்பப்பட்ட நிலையில், பாதியில் கைவிடப்பட்டது.
கற்களுக்கு வரிசை எண் இல்லை
இக்கோயில் கட்டுமானத்தைப் பிரிக்கும்போது, ஒவ்வொரு கல்லுக்கும் வரிசை எண் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இப்பணியும் முறையாகச் செய்யப்படாததால், எந்தெந்த கல்லை எங்கெங்கு அடுக்கி கட்ட வேண்டும் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதனால், இக்கோவிலை எடுத்துக் கட்டும் பொறுப்பைத் தமிழ்நாடு தொல்லியல் துறை எடுத்துக் கொண்டுள்ளது. பக்தர்கள் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்ததால் அறநிலையத் துறை அலுவலர்கள், தொல்லியல் துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திருப்பணியைத் தொடங்கி வருகிற தை மாதத்தில் குடமுழுக்கு விழா நடத்தி விடலாம் எனக் கூறினர். ஆனால், தை முடிந்து விட்டது. இருப்பினும் திருப்பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் பொதுமக்களை ஒன்றிணைத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.
அறநிலையத்துறை கருத்து
அறநிலையத்துறை தரப்பில் கூறுகையில், கோவிலை சீரமைக்க தமிழக ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த வாரம் நாகநாதசாமி கோவில் வளாகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். விரைவில் சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.