தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெசன்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (42). இவர், நகை கில்ட் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35). இவர்களுக்கு கோபிகா (4), கேசவ் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது தங்கையின் வீட்டில் தனது மகள் கோபிகாவை கடந்த செவ்வாய்கிழமை கொண்டு சென்று விட்டுள்ளார் ராஜா.
கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ளது ராஜாவின் தங்கை வீடு. 4-வது மாடியில் உள்ள அந்த வீட்டின் பால்கனியில் குழந்தை கோபிகா விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். வெளியில் வாகனங்கள் செல்லும் சத்தம் உட்பட பலவற்றால் ஈர்க்கப்பட்ட அந்த குழந்தை எப்படியோ எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து தவறிக் கீழே விழுந்துள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரின் இதயமே சில விநாடிகள் துடிக்க மறந்துதான் விட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை உடன் தூக்கிக் கொண்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி கோபிகாவை அனுப்பி வைத்தனர்.
குழந்தையை அந்த நிலையில் பார்த்து பெற்றோர் கதறிய கதறல் மருத்துவமனையில் இருந்தவர்களை கண்கலங்கச் செய்து விட்டது. திருச்சியில் சேர்க்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை கோபிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கோபிகாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் கும்பகோணம் அருகே வீட்டு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிரில் கம்பிகளுக்கு மத்தியில் தலை மாட்டிக் கொண்டு பின்னர் பொதுமக்களின் உடனடி நடவடிக்கையால் மீட்கப்பட்ட சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அப்பார்ட்மெண்ட்டுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளை பால்கனியில் விளையாட விடுவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அருகில் பெற்றோரோ அல்லது உறவினர்களோ இருந்தால் மட்டுமே குழந்தைகளை பால்கனியில் விளையாட அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் குழந்தைகளை பால்கனிக்கு அனுமதிக்க கூடாது. குழந்தைகள் உயரத்தில் இருந்து கீழே பார்க்க ஆவல் தூண்டும் போது அதில் உள்ள ஆபத்துக்களை அறியமாட்டார்கள். அவ்வாறு செய்யும் போது கவனம் தவறியோ, கை நழுவியோ விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்