தஞ்சாவூர்: தஞ்சை புதிய ஹவுசிங் யூனிட் ஆலமர பேருந்து நிறுத்தத்தில் ரூ. 5.5 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட நவீன பயணிகள் நிழற்குடை குடையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கத்தின் சார்பாக புதிய ஹவுசிங் யூனிட் ஆலமர பேருந்து நிறுத்தத்தில் ரூ. 5 .5 லட்சம் செலவில் புதிதாக நவீன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு இன்னர்வீல் சங்கத் தலைவி ரேகா குபேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் செல்வி இளங்கோ, முன்னாள் தலைவி உஷா நந்தினி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த புதிய நிழற்குடையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொன்விழா கண்ட தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கத்தின் உறுப்பினர்களையும் அவர்கள் 50 ஆண்டு காலமாக சமுதாயத்திற்கு செய்து வரும் தொண்டுகளையும் பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் தலைவர்கள் விஜயா சுவாமிநாதன், சுந்தரி சுப்பிரமணியம் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நிழற்குடை அமைக்கும் பணியை மிகவும் சிறப்பாக செய்தமைக்காக இன்னர் வீல் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான உஷா நந்தினி விஸ்வநாதன், நிர்மலா வெங்கடேசன், டாக்டர் சோபியா சோமேஷ், சண்முக வடிவு உமாபதி, ஒப்பந்தக்காரர் கீழவாசல் ராஜா ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை தலைவர் ரேகா குபேந்திரன், செயலாளர் தனலட்சுமி திருவள்ளுவன் ஆகியோர் செய்து இருந்தனர்.
இந்த பயணிகள் நிழற்குடையில் முதல்முறையாக ஒரு சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக பயணிகள் நிழற்குடையில் தினசரி பத்திரிகைகள், வார இதழ்கள் மற்றும் நூல்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலகத்திற்கு பொதுமக்கள் நூல்களை அன்பளிப்பாக வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் இந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கலாம். அதேபோல் பொதுமக்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களை இந்த நூலகத்திற்கும் அளிக்கலாம். இந்த திட்டம் புதுமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் இன்னர்வீல் சங்கம் 1973ல் தொடங்கப்பட்ட பன்னாட்டு மகளிர் அமைப்பாகும். நட்பு மற்றும் சமுதாய சேவை செய்யும் நோக்கத்திற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பல பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்காக பல்வேறு சேவைகளை இன்னர்வீல் சங்கம் செய்துள்ளது. சுனாமியின் போது அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவியது. இது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட 55 மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இதேபோல் தஞ்சையில் பார்வைதிறன் குறைந்த மாணவிகள் பயிலும் அரசு பள்ளியில் கழிவறை இன்னர்வீல் சங்கம் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
காடுகளின் பயன்களை மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அரசு வழங்கிய நிலத்தில் இன்னர் வீல் குறுங்காடு ஒன்றை அமைத்து பராமரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு சமுதாய சேவைகளை செய்து வரும் இன்னர்வீல் சங்கம் தற்போது மக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பயணிகள் நிழற்குடையை கட்டி கொடுத்துள்ளது.