தஞ்சாவூர்: வரும் நவம்பர் 7ம் தேதி தஞ்சையில் நடக்கும் திருமணவிழா, எம்.பி. அலுவலகம் திறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தஞ்சாவூரில் நடந்த மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்


தஞ்சையில் மத்திய மாவட்டம் தி.மு.க‌ செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் வரவேற்று பேசினார்.  தொகுதி மேற்பார்வையாளர்கள் ஏ.கே.எஸ். விஜயன் (தஞ்சாவூர்), பரணி கார்த்திகேயன் (ஒரத்தநாடு), கேசவன் (திருவையாறு ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு


கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்வது. கனமழையின் போது சென்னை மாநகர் பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இரவு பகல் பாராமல் பணியாற்றிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வது. 




வரும் நவம்பர் 27ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் மாதம் முழுவதும் தஞ்சை மத்திய மாவட்டம் நிர்வாகிகள் சார்பில் மாவட்டத்தில் உள்ள மறுவாழ்வு இல்லம், முதியோர் இல்லம், கருணை இல்லம், ஆதரவற்றோர் இல்லம், பார்வையற்றோர் இல்லம், காது கேளாதோர் விடுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்க வேண்டும்.


பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதல்வர்


நவம்பர் 7ம் தேதி தஞ்சாவூர் மகாராஜா மஹாலில் நடைபெறும் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு மகள் திருமண நிகழ்ச்சிக்கும், தஞ்சாவூர் ராமநாதன் ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவிற்கும், திருவையாறு தெற்கு ஒன்றியம் கண்டியூர் கிளைக் கழகத்தில் புறவழிச்சாலையில் கழகப் பவள விழா கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி, கோனேரி ராஜபுரத்தில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வெண்கல சிலை திறப்பு விழா , கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சாவூருக்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


முன்னதாக கழக கொள்கை தூணாக விளங்கிய முரசொலி செல்வம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், முரசொலி எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, செல்வம், மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன், மாவட்ட பொருளாளர் அண்ணா, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, கனகவள்ளி பாலாஜி, பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்‌.