தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு போக்குவரத்து ஏஐடியூசி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதி மாதம் ஒன்றாம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வருகிறது. தமிழ்நாட்டில் பணி புரிந்து வருகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் சில பொதுத்துறை ஊழியர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி வழங்க வேண்டிய சம்பளத்தை தற்போது அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன், நிலுவைத் தொகையும் சேர்த்து சம்பளமும் தீபாவளிக்கு முன்னதாக வழங்கப்படுவதாக தெரிய வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள், பணியாளர்கள், அலுவலர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்கிட போக்குவரத்து கழகத்தில் செயல்படும் ஏஐடியுசி தொழிற்சங்கம் தமிழ்நாடு அரசையும், கழக நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறது. மேலும் பத்து தினங்களுக்கு முன்னதாக போனஸ் அறிவிக்கப்பட்டு பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு இன்னமும் போனஸ் வழங்கப்படவில்லை.
தீபாவளி நெருங்கி வருவதால் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்கள் பணி பாதிக்காத வண்ணம் அவரவர் குடும்பங்களுக்குத் தேவையான ஆடைகளையும், மளிகை பொருட்களையும் வாங்கி கொடுத்து, பணியை தொய்வின்றி நடத்திட ஏதுவாக உடன் போனஸ் தொகையை வழங்கிட வேண்டும். மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு பிரதி மாதம் 5-ம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சுமார் 96 ஆயிரம் ஓய்வூதியர் குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு அரசும் கழக நிர்வாகங்களும் தீபாவளிக்கு முன்னதாக ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும் என்று ஏஐடியுசி தொழிற்சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் தெரிவித்துள்ளார்.