தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குப்பை சேகரித்த பெண்களை செருப்பால் அடித்த, தி.மு.க., மகளிரணி கணவரை போலீசார் 3 வழக்குகளின் கீழ் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் (56). இவரது மனைவி தீபா லெட்சுமி. இவர் பேராவூரணி ஒன்றிய தி.மு.க., மகளிரணி அமைப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று துறவிக்காடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி போதும்பெண்ணு (22) உட்பட பெண்கள், குறிச்சி மாரியம்மன் கோவில் பகுதியில் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, சுவாமிநாதனுக்கு செந்தமான இடத்தில் கிடந்த பிளாஸ்டிக் உட்பட குப்பைகளை அந்த பெண்கள் சேகரித்துள்ளனர். அப்போது அங்கு வந்த சுவாமிநாதன், அந்த பெண்களிடம், பொருட்களை எல்லாம் திருடி செல்வதாக கூறி, அந்த பெண்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும், அவர்கள் குப்பை சேகரித்து வைத்திருந்த பையை கீழே கொட்ட கூறினார். அப்போது அந்த பெண்கள் அதில் குப்பைகள்தான் உள்ளது என்று கூறிய போதும் அந்த பையை பறித்து கொட்டிப் பார்த்துள்ளார். தொடர்ந்து போதும் பொண்ணு என்ற பெண்ணை செருப்பால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் அந்த பெண்கள் குப்பைகளை மட்டும்தான் பொறுக்கி உள்ளனர். ஆனால் இதுபோன்று செருப்பால் அடித்து அவர்களை அவமானப்படுத்துவது சரியான முறையில்லை. மேலும் இது மனிதாபிமானம் இல்லாத செயல் என்று கருத்துகள் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து அறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உடன் இதில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட எஸ்.பி., அறிவுறுத்தல் பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீசார், சுவாமிநாதனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பிறகு, குறிச்சி வி.ஏ.ஓ., சாந்தலிங்கம் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் பேரில் சுவாமிநாதன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், வீடியோ வைரலான உடனேயே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு மனிதாபிமானம் இல்லாத நடந்து கொண்ட சுவாமிநாதனை கைது செய்ய கூறிய மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி., போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.