தஞ்சாவூர்: மழையில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ சார்பு) சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தற்போது பெய்த கடும் மழையினால் மூழ்கி சேதமடைந்து, அழுகிப்போன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கம் (சிபிஐ சார்பு) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. பாஸ்கர் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளதாவது:

Continues below advertisement

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை தெற்கு மாவட்ட குழுவின் சார்பில்  ஒரத்தநாடு, புதூர், பருத்திக்கோட்டை, பொன்னாப்பூர், குலமங்கலம், உரந்தைராயன் குடிக்காடு, ஒக்கநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் சேதமடைந்து மூழ்கி அழுகிப்போன நெற்பயிர்களையும், சம்பா பயிருக்காக நடவு நடப்பட்டு மூழ்கி நாற்றுகள் அழுகிப் போன வயல்களையும், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக காத்திருந்து, மழையில் நனைந்து முளைத்து போன நெல் மூட்டைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில்  நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு மழையினால் நெல் முளைத்து காணப்படுகிறது. அதேபோன்று பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழை நீரில் மூழ்கி அழுகி கிடக்கிறது. சம்பா பயிருக்காக பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி உள்ளது. எனவே, தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக  ஈரப்பதம் பாராது அனைத்து நெல்லினையும்  கொள்முதல் செய்ய வேண்டும்.

குறைந்தது, ஒரு நாளைக்கு 2000 ம் மூட்டைகளாவது கொள்முதல் செய்ய வேண்டும். லாரி தடையில்லாமல் கொள்முதல் செய்த நெல்லை ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கு மற்றும் விவசாயிகளுக்கு படுதா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, மழைநீரில் மூழ்கிய அறுவடை செய்ய இயலாத வயல்களை முறையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், சம்பா பயிருக்காக நடவு செய்யப்பட்டு அழுகிப்போன வயல்களையும் ஆய்வு செய்து கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

ஆய்வின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ. சக்திவேல், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்  அ.கலியபெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் சீனி. முருகையன், கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தி. திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.