தஞ்சாவூர்: திமுகவும், விசிகவும் ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் எங்களை யாராலும் பிரிக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

Continues below advertisement


தஞ்சாவூரில் கட்சி நிர்வாகி இல்ல படத்திறப்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற திருமாவளவன் பேசியதாவது: திமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு இணக்கமான உறவு உள்ளது. இதுதான் பல பேருக்கு வயித்தெரிச்சல், எவ்வளவு சொன்னாலும் திமுகவையும் விடுதலை சிறுத்தையையும் பிரிக்க முடியலையே என்கின்ற  மனக்குமுறல் சிலருக்கு உள்ளது.


இதற்காக விடுதலை சிறுத்தை கட்சியை  இழிவாக விமர்சிப்பது, இரண்டு சீட்டுக்கும், மூன்று சீட்டுக்கும் முட்டுக் கொடுக்கும் கட்சி என்று, கேவலமாக பேசுவது. அதிலே அவர்களுக்கு ஒரு ஆனந்தம். திருமாவளவனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆத்திரப்படுவார்கள், ஆகவே இரண்டு கட்சிகளுக்கு இடையிலான உறவே நாம் சிதைத்து விடலாம் என்று பல பேர் எண்ணுகிறார்கள் அது ஒருபோதும் நடக்காது.


ஏனென்றால், நாங்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் கொள்கையை பின்பற்றி வருகின்றோம். அதே கொள்கைதான் தான் திமுகவும் பின்பற்றி வருவதால், எங்களுக்குள் எந்த ஒரு பிரிவினையும் ஏற்படாது. நீங்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும், எங்களை பிரித்தாலும் எண்ணம் தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது. 


இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளது தேர்தல் நடைபெற, இதற்கு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் மிகத் கடுமையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள்ள உறவினை பிரித்தாக வேண்டும் என்று பல முயற்சியை மேற்கொள்வார்கள். திட்டமிட்டு அவதூறுகளை பரப்புவார்கள், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


நமது கூட்டணியை பற்றி யார் வேண்டுமானாலும் எதைப்பற்றினாலும் பேசிட்டு போகட்டும் அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில், நாம் அவர்கள் விரிக்கும் வலையில் சிக்க கூடாது. நம்முடைய குறிக்கோள் எல்லாம்  எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், சிறுத்தைகள் கூட்டணியில் தருமத்தை விட்டு என்றும் மாறக்கூடாது. இந்தக் கூட்டணியில் எத்தகைய கட்சி விலகினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.


நாம் பேசும் அரசியலும், திமுக பேசும் அரசியல் ஒன்று.  பாஜகவின் எண்ணங்கள் தமிழகத்தில் கழகங்கள் இல்லாத கட்சியை உருவாக்க வேண்டும் என்பது.  திமுக, அதிமுக இரண்டு கழகங்களையும் பாஜகவுக்கு பிடிக்காது, முதலில் அதிமுகவை கைப்பற்றி பிறகு திமுக கட்சியை நாம் வென்று விடலாம் என்று எண்ணுகிறது. ஆகையால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரும் தேர்தலில் நாம் கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என்றார்.