தஞ்சாவூர்: தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு (101) வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் புதுகரியப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.

Continues below advertisement

தமிழ் திரைப்பட கவிஞர் சினேகனின் பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகில் உள்ள "புதுகரியப்பட்டி" கிராமம் ஆகும். இவரது தந்தை சிவசங்கு (101). விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு ஆறு அண்ணனும், அக்கா ஒருவரும் உள்ளனர். இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ம் ஆண்டு திரைப்படங்களுக்கு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.

2009ம் ஆண்டில் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். .2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் இவரது தந்தை சிவசங்கு (101) வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார்.

Continues below advertisement

இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சினேகன் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம். எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் காலமாகி விட்டார் என்ற துயர தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.