தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை, ரொக்கம் திருடிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.


பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து திருட்டு


தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (72). இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் நாகையில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு அறையில் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.




தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை


இதுகுறித்து கலியமூர்த்தி மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா,  சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.


தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பைக்கில் சென்ற இருவரது முகம் பதிவானது. தொடர்ந்து அதை ஆய்வு செய்தபோது, அவர்கள் கலியமூர்த்தி வீட்டில் நகை, ரொகக்ம் திருடியதும், இதே போல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதியில் கோயில் சிலை, வீட்டை உடைத்து ரொக்கம் திருட்டு போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு


தொடர்ந்து போலீசார் சிசிடிவி பதிவுகளில் இருந்த அந்த 2 பேரின் அடையாளங்களை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஒருவருக்கு கழுத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த அடையாளத்தை வைத்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூர் பகுதியில் பைக்கில் வந்த திருவாரூர் மாவட்டம் வெல்லக்குடியைச் சேர்ந்த குமரேசன் (30) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.


கர்நாடகாவில் பதுங்கியிருந்த திருடர்கள்


குமரேசன் கொடுத்த தகவலின் படி தனிப்படையினர் கர்நாடக மாநிலம் சென்று அங்கு பதுங்கி இருந்த நாகராஜ் (33), அவரது கூட்டாளி கன்னியாகுமரி மணி (32) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் இவர்கள் மூவரும் தஞ்சாவூர், மன்னார்குடி பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது.


லாக்கரை உடைக்க முடியாததால் தூக்கிச் சென்றனர்


மன்னார்குடியில் ஒரு வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு வீட்டிலிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியாததால் அந்த லாக்கரையே தூக்கிச் சென்று பொறுமையாக உடைத்துள்ளனர். பின்னர் அந்த லாக்கரை திருத்துறைப்பூண்டியில் ஒரு ஏரியில் வீசி விட்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த லாக்கரை மீட்டனர். அதே போல் தஞ்சாவூரில் திருடிய 7 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் மீட்டனர். மேலும் அவர்களிடம்  இருந்து ஒரு கார், பைக், வீடுகளில் பூட்டை உடைக்க பயன்படுத்திய கருவி போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது.


கைது செய்யப்பட்ட மூவர் மீதும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவாரூர், நாகை, கர்நாடக மாநிலம் கோலார் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.


தனிப்படை போலீசாருக்கு பாராட்டு


வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலை தீவிர விசாரணை நடத்தி கைது செய்த தனிப்படை போலீசாரை தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஸ்ராவத், டவுன் டி.எஸ்.பி., சோமசுந்தரம் மற்றும் போலீசார் பாராட்டினர்.