தஞ்சாவூர்: மிகவும் முக்கியமான உடல் உறுப்பு தானத்தில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாதனை படைத்து வருகிறது. மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பாராட்டுக்களை குவித்து வருகிறார் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன். 


உடல் உறுப்பு தானம்,  உடல் தானம் பற்றி விழிப்புணர்வு


உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் இரண்டிற்குமான வித்தியாசம் உள்ளது. உடல் உறுப்பு தானம் என்பது நமது உடலில் உள்ள உறுப்புகளை நம் காலத்திற்குப் பின்பு மற்றவர்களுடைய பயன்பாட்டிற்காகத் தானமாக வழங்குவது. ஆனால், உடல் தானம் என்பது, நமது உடலையே படிப்பிற்காகத் தானமாக வழங்குவது. முதலாமாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் முதலில் ஒரு மனித உடலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் மருத்துவத்தைப் பற்றி அவர்கள் படிக்க முடியும். 


யார் உடல் உறுப்பு தானம் தரலாம்?


மூளைச் சாவு அடைந்திருந்தால் மட்டுமே இருதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புக்களை தானம் செய்ய முடியும். இயற்கை மரணமடைந்தால் கண் தானம் செய்யலாம். ஆனால் முக்கிய உறுப்புகளை தானம் செய்ய முடியாது. அதேசமயம் இயற்கை மரணம் எய்தினால் உடல் தானம் செய்ய முடியும். இறந்த பிறகு தானம் செய்யப்படும் உடல்கள் மருத்துவ மாணவர்களின் உடற் கூறாய்வு ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. தங்களின் உடலை இறந்த பிறகு தானம் செய்ய விரும்புபவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறைக்குச் சென்று உடல் தானத்திற்கான படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும்.


இறந்த பிறகு உடலை தானம் செய்யச் சம்மதம் தெரிவிக்கும் வகையில் உறுதிச் சான்றில் கையொப்பம் இட்டு, கோரப்படும் மற்ற தகவல்களையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். இறந்த பிறகு உடலைப் புதைப்பதற்கு முன்பு அல்லது தகனம் செய்வதற்கு முன்பு செய்ய வேண்டிய மதச் சடங்குகளைச் செய்துகொள்ளலாம். அதன் பிறகு உடலை மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்க வேண்டும்.


உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் உடல் தானம் செய்யச் சம்மதிப்பவர்களின் உடல்கள் அவர்கள் இறந்த பிறகு தானம் செய்யப்படாமலும் போகிறது. தானம் செய்பவர், தான் உடல் தானம் செய்திருப்பதை தங்கள் குடும்பத்தினரிடம் அல்லது தனக்கு நெருக்கமானவர்களிடமாவது தெரிவிப்பது நல்லது. 




பல மாவட்டங்களில் இருந்தும் வரும் மக்கள்


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டும் இன்றி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு 2000 லிருந்து 3000 பேர் நோயாளிகளாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருதயம், எலும்பு முறிவு, புற்றுநோய், சாலை விபத்து, டயாலிசிஸ், ஆஞ்சியோ உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.


28வது சிறுநீரக அறுவை சிகிச்சை


அந்த வகையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை 17வது உடல் உறுப்பு தானமும், 28வது சிறுநீரக அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மருத்துவக்கல்லூரியா என்று அச்சப்பட்டவர்கள் மத்தியில் இன்று நம் மருத்துவக்கல்லூரி என்ற அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் என்றால் மிகையில்லை. சாதாரண மக்கள் அவர்களின் நோய்களை தீர்க்கும் இடமாக பார்க்கும் மருத்துவமனையை தேடி வந்து குணம் பெற்று செல்லும் அளவிற்கு மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து இன்று விருட்சமாக வளர செய்துள்ளார் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் என்றால் மிகையில்லை. 


விழிப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவக்கல்லூரி முதல்வர்


தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் யாரும் மூளை சாவு அடைந்தால் உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் மற்றும் அவரது மருத்துவக்குழுவினர் மூளை சாவு அடைந்தவரின் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இதை பற்றி முழுமையாக கூறும் பொழுது அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடனே சம்மதம் தெரிவிக்கிறார்கள்.


இதனால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிகளவில் உடல் உறுப்பு தானம் நடைபெற்று பல்வேறு தரப்பினருக்கு உடல் உறுப்புகள் கிடைக்க பெறுகிறது. தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவர்களின் இருதயம், கல்லீரல், சிறுநீரகம், இதயம், தோல், கண் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், சென்னை திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய நோயாளிகளுக்கு அனைத்து வகையான உறுப்புகளும் எளிதில் கிடைக்கப்பெறுகிறது.


மாநில அளவில் 3வது இடம் பிடித்தது


இந்த வகையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உடல் உறுப்பு தான எண்ணிக்கையில் மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்க உள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்கள் பாராட்டி வருகின்றனர்.