தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி பகுதியில் இயங்கி வரும் தார் பிளாண்ட் மற்றும் மாடர்ன் ரைஸ் மில் ஆகியவற்றால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. மேலும் புதிதாக தார் பிளான் மற்றும் ரைஸ் மில் அமைக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


திருக்கானூர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 தார் பிளான்ட் மற்றும் மாடர்ன் ரைஸ்மில்கள் இயங்கி வருகிறது. ரைஸ்மில்களில் இருந்து அதிக அளவு கழிவு நீர் மற்றும் சாம்பல் உட்பட பல்வேறு கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. சில மாடர்ன் ரைஸ் மில் மற்றும் தார் பிளாண்ட் அனைத்தும் 60 அடி கிராவல் அள்ளிய பள்ளங்களில் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் அனைத்தும் 60 அடி பள்ளத்தில் விடப்படுகிறது.


இதனால் நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் நிலை உள்ளது. மேலும் மாடர்ன் ரைஸ்மில்களில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல்களால் இப்போதில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூக்கள் மற்றும் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.


மேலும் இப்பகுதியில் புதிதாக தார் பிளாண்ட் மற்றும் மாடர்ன் ரைஸ் மில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே மேலும் தார் பிளாண்ட் மற்றும் மாடர்ன் ரைஸ் மில் அமைக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஏற்கனவே உள்ள தார் பிளாண்ட், ரைஸ் மில்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா கல்லக்குடி கிராமத்தில் விநாயகர் கோயில் இடத்தில் தனி நபர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கோயிலுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


இதுகுறித்து திருவையாறு தாலுகா கல்லக்குடி மேலத்தெருவை சேர்ந்த கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:


எங்கள் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கார்த்திகை மாதம், மார்கழி வழிபாடு, விநாயகர் சதுர்த்தி ோன்ற விசேஷ காலங்களில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம்.


இந்தக் கோயிலுக்கு மூன்று புறமும் காம்பவுண்ட் சுவர் உள்ளது.  வெளிப்புறமும் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில் தனி நபர் ஒருவர் வலது புற காம்பவுண்ட் சுவருக்கு அருகிலேயே வீடு கட்டி வருகிறார். இவர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.


இதுகுறித்து அந்த நபரிடம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கேட்டால் தரக்குறைவாக பேசி தகராறு செய்து வருகிறார். எனவே வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் செல்வ விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி நான்கு எல்லையில் கல்நட்டு எவ்வித இடையூறும் இல்லாமல் செய்து தர கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.