தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னகப்பண்பாட்டு மையம் நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. நாட்டுப்புறக் கலைஞர்கள்தான் தென்னகப்பண்பாட்டு மையத்தின் முதுகெலும்பு என்று மையத்தின் இயக்குனர் கே.கே.கோபாலகிருஷணன் தெரிவித்தார்.


தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் மையத்தின் இயக்குநர் கே.கே.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சதீவு மாநிலங்களை உள்ளடக்கி இம்மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.


கலைஞர்களின் ஊதியம் கடந்த 2024-ம் ஆண்டு முதல் கலைஞர்களுக்கு ரூ.1,000த்திலிரு்து ரூ.6 ஆயிரமாக குழுத் தலைவருக்கும், ரூ.800லிருந்து, ரூ.3 ஆயிரமாக குழுவின் இதர கலைஞர்களுக்கும் மத்தியஅரசின் உத்தரவின்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. மேலும் கலைஞர்கள் ரயிலில் சிலிப்பர் வசதிக்கு பதிலாக 3-ஏசி படுக்கை வசதி பயணம் செய்ய தகுதி உடையவர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். தினசரி பயணத்தின்போது தினசரி உணவு செலவுக்காக ரூ.400லிருந்து ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல் தஞ்சாவூரைச் சேர்ந்த உள்ளூர் கலைஞர்களுக்கு, வாரந்தோறும் கலைநிகழ்ச்சிகள் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைஞர்கள் 750க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அதே நேரத்தில் வடமாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்திட தஞ்சாவூரைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் சென்று வருகின்றனர்.


தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா கலைநிகழ்ச்சிகளில், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் தஞ்சாவூரிலிருந்து கரகம், காவடி, தப்பாட்டம், காளியாட்டம், பெரியமேளம், சிவன் - பார்வதி ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை நடத்திட 120க்கும் மேற்பட்ட கலைஞர்கள் செல்கின்றனர். இவர்கள் சென்று வர, தங்குவதற்கான செலவுகளை தென்னக பண்பாட்டு மையம் செய்து வருகிறது. தென்னக பண்பாட்டு மையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் தான் முதுகெலும்பு. அவர்களுடைய வாழ்வாதாரம் தான் முக்கியம். உள்ளூர் கலைஞர்களை எவ்வாறு புறகணிக்க முடியும். மணிப்பூர், தெலுங்கு காரர்களை கொண்டு வந்து இங்கு நிகழ்ச்சி நடத்த முடியுமா. ரெட்டிபாளையம், மனோஜிப்பட்டி, வல்லம், செங்கிப்பட்டி இந்த கிராமங்களை சேர்ந்த உள்ளூர் கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு வாரம் ஒரு முறை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வருடத்திற்கு கிட்டத்தட்ட 2,000 கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.


மேலும், மையம் சார்பில் நடத்தப்படும் சலங்கைநாதனம் கலைநிகழ்ச்சிகள், கரோனாவுக்கு பிறகு நடத்தப்படாமல் உள்ளது. இந்த நிகழ்ச்சியை வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் மையத்தில் 50க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை செய்ய நிரந்தரமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


மையம் சார்பில், கடந்த 2023ம் ஆண்டு முதல் தேவார திருமுறை பயிற்சி வாரந்தோறும் கரந்தை கலைக் கல்லூரியில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று இஸ்லாமிய மாணவர்கள் உள்பட 70பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்றார். பேட்டியின் போது நிர்வாக அலுவலர் சீனிவாசன் உடன் இருந்தார். 


நமது நாட்டின் கலை மட்டுமின்றி உலகின் உள்ள பராம்பரிய கலைகளை பரப்புவதற்காக தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்திற்கு ஏராளமான கலைஞர்கள் வந்து செல்கின்றனர்.


இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களின் கலைகளை கொண்ட நுழைவாயில் கதவுகள் பிரமிக்க வைக்கிறது. 3 ஆயிரம் கலைப்பொருட்கள் உள்ள கலைக்கூடம், கண்காட்சி கூடம், கலைக் கூடத்தில் இருந்த வர்ண ஓவியங்கள், கருங்கல் சிற்பங்கள், கண்ணாடி சிற்பங்கள், மைய மண்டபத்தில் இயற்கை வர்ணங்களால் வரையப்பட்டுள்ள கேரள முரல் ஓவியம் பார்க்க, பார்க்க திகட்டாத இனிப்பு போல் இருக்கிறது. இந்த ஓவியம் மகாபாரத ராமாயண இதிகாசக் கதைகளிலிருந்து வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த அற்புதமான சுற்றிப்பார்க்க சிறந்த இடமாக தென்னகப் பண்பாட்டு மையம் உள்ளது.


இங்கு, கலை விழாக்கள்,  பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்குதல், நாட்டுப்புற கலை விழா, கலைப் போட்டி, கலைக்கண்காட்சியும் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.