தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மேலவெளி ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மேலவெளி ஊராட்சி காமாட்சி அம்மன் தோட்டம் பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்திற்கு 100 நாள் வேலைத்திட்டம்தான் உதவிகரமாக உள்ளது. இதில் கிடைக்கும் சம்பளத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

இந்நிலையில் எங்கள் பகுதியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதால் 100 நாள் வேலை திட்டம் எங்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேலவெளி ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் ஒன்றியம் பாபுராஜபுரத்தில் உள்ள ஒன்பதாவது வார்டை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கீழக்கொட்டையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கீழக்கொட்டையூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதில் அதிகமானோர் விவசாய கூலித் தொழிலாளர்கள்தான். தினந்தோறும் கிடைக்கும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு ஊராட்சியின் மூலம் கிடைக்கக்கூடிய சில திட்டங்கள் எங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
முக்கியமாக 100 நாள் வேலைத்திட்டத்தை மட்டுமே நம்பி பல குடும்பங்கள் வசித்து வருகிறோம். விவசாயப்பணி இல்லாத நிலையில் இந்த நூறுநாள் வேலைத்திட்டம்தான் எங்கள் குடும்பத்தை நடத்த உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு எங்கள் ஊராட்சியின் 9வது வார்டு கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் மாநகராட்சிக்கு வரி செலுத்தும் அளவிற்கு நாங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோம். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாங்கள் அனைவரும் வாழ்வதற்கு பெரும் உதவியாக இருந்து வரும் ஊராட்சித் திட்டங்களை தொடர்ந்து கிடைக்க செய்யும் வகையில் பாபுராஜபுரத்தில் உள்ள 9வது வார்டு கும்பகோணம் மாநகராட்சி உடன் இணைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதில் நகராட்சி எல்லைக்குள் எங்கள் கிராமமான விளாங்குடி இணைப்பதாக தகவல்கள் ெளியானது. எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் கடந்த வருடம் விளாங்குடி ஊராட்சியை திருவையாறு நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று மனு அளித்தோம். அதேபோல் திருவையாறு வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
இது நாள் வரை அரசு தரப்பில் ஊராட்சி இணைப்பு தொடர்பாக எந்த பதிலும் வழங்கவில்லை. வரும் குடியரசு தினத்தன்று நகராட்சி அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எங்கள் விளாங்குடி ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க கூடாது, எங்கள் பகுதி ஊராட்சியாகவே தொடர வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.