தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி நடுத்தெரு பகுதியில் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து மனைப்பிரிவு அமைக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


மேலவஸ்தா சாவடி மக்கள் கோரிக்கை மனு


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அந்த வகையில் தஞ்சாவூர் அருகே மேல வஸ்தா சாவடி நடுத்தெருவை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்


தஞ்சாவூர் அருகே மேல வஸ்தா சாவடி நடு தெருவில் நாங்கள் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு பொதுக் குளமும், முத்துமாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் பொது பயன்பாட்டிற்குரிய இடத்தில் பொது சத்திரமும், பொது தண்ணீர் பந்தலும் ஆதி காலம் முதல் இருந்து வருகிறது. இவற்றை தற்போது வரை நாங்கள் பராமரித்து அனுபவித்து வருகிறோம்.


இந்நிலையில் நவநீதம் என்பவரின் மகன்கள் பாஸ்கர், விஜயகுமார், கோகுல், ராமச்சந்திரன் என்பவர் மகன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சட்டத்திற்கு முரணாக ஆவணங்களை தயார் செய்து மேற்படி இடங்களில் அத்துமீறி நுழைந்து மனை பிரிவு அமைக்க முயற்சி செய்தார்கள். நாங்கள் அதனை தடுத்து நிறுத்தினோம். மேலும் சில தரகர்களின் தூண்டுதலின் பேரில் மேற்படி இடத்தில் அமைந்து இருந்த ஆங்கிலேயர் கால பழைய கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கி கோயில் குளம், பொது தண்ணீர் பந்தல், பொது சத்திரம் ஆகியவற்றையும் சேதப்படுத்தி விட்டனர். இதை தடுக்க முற்பட்டபோது எங்களை கொலை செய்வதாகவும் மிரட்டல் விடுத்தனர். 


இதுகுறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரிய விசாரணை மேற்கொண்டு பழமை வாய்ந்த நினைவுச்சின்னத்தை சேதமாக்கி, ஆக்கிரமிப்பு செய்து மனைப்பிரிவு அமைக்க முற்படும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.




ஆங்கில ஒற்றை மருத்துவத்தை மறைமுக திணிக்கின்றனர்


அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடம் ஆங்கில ஒற்றை மருத்துவத்தை நூதன முறையில் மறைமுகமாக திணிப்பது இந்திய அரசியல் அமைப்பின் கோட்பாட்டுக்கு சட்டவிரோதமானது என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் மனு அளித்தார்.


அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பல மருத்துவ முறைகள் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி, அக்குபஞ்சர் மற்றும் மரபு வாழ்வியல் என்று பல மருத்துவ முறைகள் பின்பற்றும் நம் நாட்டில் குறிப்பாக பள்ளி குழந்தைகளிடம் ஒற்றை மருத்துவ நூதன மறைமுக திணிப்பை  உடனடியாக கைவிட வேண்டும். பள்ளியில் மத திணிப்பு என்பது தேவையில்லாத உரிமை மீறல் மட்டுமே.


பக்கவிளைவுகளுடன் கூடியது


ஆனால் குழந்தைகளின் உடல் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பக்க விளைவுகளுடன் கூடிய ஆங்கில ஒற்றை மருத்துவத்தை நூதன முறையில் திணிப்பது என்பது கொலை முயற்சி மற்றும் தேசத்துரோக குற்ற செயலாகும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பார்வையில் தடுப்பூசி மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுக்கும் போது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒற்றை மருத்துவ மாயையில் அதீத நம்பிக்கை ஏற்படுகிறது. மருத்துவர்களால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள். 


இப்படி ஆராய்ச்சி அடிப்படையில் தடுப்பூசிகளை போடுவதையும் மாத்திரைகளை நூதனமாக பள்ளிகளில் திணிப்பதையும் இலவசமாக நஞ்சுள்ள மாதவிடாய் பஞ்சுகளை கொடுப்பதையும் உடனடியாக அனைத்து கல்வி வளாகங்களிலும் தடை செய்ய வேண்டும். குழந்தைகள் கல்வி கற்றுக் கொள்ள மட்டுமே பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெற்றோர்களுக்கும் அதை நம்பியே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். மருந்து பொருட்களை கொடுத்து ஆராய்ச்சி செய்வதற்கு அல்ல. பக்க விளைவுகள் உள்ள மருந்து பொருட்களை விற்பதற்கும் நோய்களைப் பற்றிய பயத்தை விதைப்பதற்கும் பள்ளி அல்லாத இடங்களை விழிப்புணர்வுக்கு பயன்படுத்துங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.