தஞ்சாவூர்: கழுதைப்பால் வாங்கலையோ... கழுதைப்பால் என்ற குரல் தஞ்சை அருகே கிராமப்பகுதிகளில் கேட்க தொடங்கி உள்ளது. மருத்துவக்குணம் நிறைந்த கழுதைப்பாலை நேரடியாக தேடி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த கழுதைபாலுக்கு கிராமப்பகுதிகளில் செம மவுசு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


கழுதைப்பால் விற்பனை


தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டையில் பல்வேறு மருத்துவக்குணங்கள் நிரம்பிய கழுதைப்பாலை பொதுமக்கள் முன்னிலையிலேயே கடலூர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கறந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த கழுதைப்பால் 10 மில்லி ரூ.100க்கு விற்கப்படுகிறது.


அழுத பிள்ளைக்கு கழுதைப் பால் கொடு என்ற வழக்குச் சொல் இன்றளவும் கிராமங்களில் கேட்க முடியும். அந்தக் காலத்தில் கிராமங்களில் குழந்தைகளுக்கு உடம்புக்கு சரியில்லை என்றால் உடனே சலவைத் தொழில் செய்பவர்களிடம் இருக்கும் கழுதையிடமிருந்து ஒரு சங்கு பால் கறந்து குழந்தைக்குக் கொடுப்பார்கள்.


இளைப்பு, ஆஸ்துமா நோய்க்கு தீர்வு:


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கழுதைப் பால் குடித்தால் கல்லும் கரையும், மஞ்சள்காமாலை, பித்தம், மந்தம், மப்பு, சொரிசிரங்கு, இளைப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் அகன்றுவிடும். எந்த நோயும் தீண்டாது என்பது மக்களின் நம்பிக்கை. இன்றும் கிராமப்புறங்களில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடக்கிறது. அந்த வகையில் தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் கடலூர் மாநிலம் தொழுதூர் பகுதியை சேர்ந்த 12 தொழிலாளர்கள் முகாமிட்டு சுற்றியுள்ள கிராமங்களில் காலை நேரத்தில் கழுதைகளை குட்டியுடன் ஓட்டிச் சென்று பொதுமக்கள் முன்னிலையில் பாலை கறந்து 10 மில்லி ரூ.100க்கு விற்பனை செய்கின்றனர்.




சளி, இருமல் குணமாக உதவும் கழுதைப்பால்


தற்போது கத்திரி வெயிலால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வரும் நிலையில் உடலில் சூடு கட்டி, கொப்பளம் போன்ற சரும பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வியர்வையால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து குணமாகவும், பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் இந்த கழுதை பால் அமைகிறது. இதனால் இப்பகுதியில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக விற்பனையாகிறது.


கழுதைப்பால் விற்பனையில் 12 குடும்பம்:


கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டுள்ள தொழுதூர் கணேசன் என்பவர் கூறுகையில், நாங்கள் 12 குடும்பத்தினர் எங்களின் 12 கழுதைகளையும், குட்டிகளையும் கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியிலிருந்து கொண்டு வந்துள்ளோம். ஐதராபாத்திலிருந்து இந்த கழுதைகளை குட்டியுடன் ரூ.50 ஆயிரத்துக்கு வாங்கி வந்துள்ளோம். கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கண் எதிரிலேயே கழுதைப்பாலை கறந்து விற்பனை செய்கிறோம். பொதுமக்களும் இந்த கழுதைப்பாலில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் கழுதைப்பாலை பருகினால் பல நோய்களுக்கு தீர்வாகும்.


நாங்கள் ஆண்டுதோறும் இந்த பகுதிக்கு வந்து கழுதை பால் விற்பனையில் ஈடுபடுவதால், பொதுமக்கள் எங்களிடம் நம்பி கழுதைப்பாலை வாங்குகின்றனர் என்றார்.