தஞ்சாவூர்: ஊனம் என்பது மனதில் தான் இருக்க்க்கூடாது. உடலில் இருந்தாலும் மனம் தளர்வு இல்லாமல் யாருக்கும் பாரமின்றி பிறர் உழைப்பில் வாழாமல் கூடை பின்னி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் மாற்றுத்திறனாளிகளான தஞ்சாவூரை சேர்ந்த தம்பதி.
இளம்பிள்ளை வாதத்தால் கால்கள் செயலிழப்பு
இரு கால்களையும் இழந்த செந்தமிழ்ச்செல்வி (40), பெற்றோர் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார். இவரது கணவரும் மாற்றுத்திறனாளி. தஞ்சாவூர் அருகே சடையார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி தூண்டியம்மா. இந்த தம்பதியின் மகள்தான் செந்தமிழ்ச் செல்வி. உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. எல்லோரையும் போலவே ஆரோக்கியமாக பிறந்தவர்தான் செந்தமிழ்ச்செல்வி. இவர் பிறந்த நான்கு மாதத்தில் உடல் நலக் குறைவால் தந்தை இறக்க, இவரை தாயார் வளர்த்து வந்தார். இதனிடையே, 4 வயதில் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட இவருக்கு இரு கால்களும் செயலிழந்தது. இதனால், இரு கைகள் உதவியுடன் தவழ்ந்துதான் செல்ல வேண்டும்.
கிடைத்த உதவியை சரியாக பயன்படுத்தி கொண்டார்
இந்நிலையில், 6 வயதில் தாயாரும் உடல் நலக் குறைவால் காலமானதால், ஆதரவற்ற நிலையில் இருந்த இவரை மாவட்ட கலெக்டரிடம் உதவி கோரி உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அப்போதைய மாவட்ட ஆட்சியர் மு. இராஜாராம் இவரது நிலையை அறிந்து அக்காலத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக இருந்த சியாமளா தேவியிடம் ஒப்படைத்தார். அவரும் தாயுள்ளத்தோடு செந்தமிழ்ச்செல்வி தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வல்லத்தில் செயல்பட்டு வந்த சந்திரா டிரஸ்ட் என்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதியில் சேர்த்தார். அங்கு 12 வயதில் பூ கட்டுதல், கூடை பின்னுதல், பினாயில், ஊதுபத்தி தயாரித்தல், மூங்கில் கூடை பின்னுதல், வயர் நாற்காலி பின்னுதல், தையல் போன்றவற்றைக் கற்றுக் கொண்டுள்ளார். இதை அங்கிருந்த பார்வையற்ற பெண் காந்திமதி கற்றுக் கொடுத்துள்ளார்.
எஸ்டிடி பூத் வைத்து முன்னேற்றம்
பிளஸ் 2 வரை படித்த செந்தமிழ்ச்செல்விக்கு 2001 ஆம் ஆண்டில் எஸ்.டி.டி. பூத் வைப்பதற்கு சியாமளா தேவி உதவி செய்தார். இதற்கு அப்போதைய வல்லம் பேரூராட்சி நிர்வாகமும் உதவி செய்தது. சுற்று வட்டாரம் முழுவதும் இந்த பூத்துக்கு வந்ததால், நாள்தோறும் ரூ. 5 ஆயிரம் வருவாய் கிடைத்தது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்து வந்துள்ளார் செந்தமிழ்ச்செல்வி. இந்நிலையில், 2010ம் ஆண்டில் தஞ்சாவூர் மேலவீதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராதாகிருஷ்ணனை என்பவரை செந்தமிழ்ச்செல்வி திருமணம் செய்து கொண்டார். மாமியாரின் ஆதரவால் இருவரும் நன்றாகதான் வாழ்ந்துள்ளனர். ஆனால் மாமியார் இறந்த பிறகு யாருடைய ஆதரவும் இந்த தம்பதிக்கு இல்லை.
பூ கட்டுதல், கூடை பின்னுதல் தொழில்
இதனால் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகரில் குடியேறி உள்ளனர். பின்னர் ரயிலடியிலுள்ள பூமாலை வணிக வளாகத்தில் கடை கிடைத்தது. கூடை பின்னுதல், பூ கட்டுதல் என பழையபடி கைத்தொழில்களைச் செய்யத் தொடங்கி உள்ளார் செந்தமிழ்ச்செல்வி. இவரது கணவர் ராதாகிருஷ்ணன் ஒரு தனியார் பால் பூத் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்..
செந்தமிழ்ச்செல்விக்கு கூடை பின்னுதல் வாயிலாக மாதம் ரூ. 2 ஆயிரம் வருவாய் கிடைக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 1,500-ம், அவரது கணவருக்கு ரூ. 1,200-ம் கிடைத்து வருகிறது. பாலாஜி நகரில் வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால், வல்லம் அண்ணா நகருக்கு தற்போது சென்றுவிட்டார். வருமானத்திற்கு அங்கிருந்து பூமாலை வணிகவளாகத்திற்கு வந்து செல்ல முடியாத நிலை.
வல்லம் பேரூராட்சி நிர்வாகத்தின் உதவி
இந்நிலையில் வல்லம் பேருந்து நிலையம் அருகே கடை வைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் சிறு இடம் கொடுத்து உதவி செய்துள்ளது. இந்த இடத்தில் சிறிய அளவில் பெட்டிக் கடை வைக்க சியாமளா தேவி உதவி செய்துள்ளார். இப்படி உறவினர்கள் உதவிகள் இன்றி தங்களாலும் வாழ்ந்து காட்ட முடியும் என்று நம்பிக்கையுடன் தங்களின் வாழ்க்கைகை நடத்தி வருகின்றனர் இந்த தம்பதி.
இதுகுறித்து செந்தமிழ்ச்செல்வி கூறுகையில், எனக்கு ஒரு மாதத்துக்கு கூடை பின்னுவதில் ஏறத்தாழ ரூ. 4 ஆயிரம் வருவாய் கிடைக்கும். மாதத்தில் சில நாட்கள் ஒரு நாளைக்கு ரூ. 250 வரை பூ கட்டிருவேன். சொந்தக்காரர்கள் எங்களைக் கைவிட்டாலும் மகளிர் சுய உதவி குழு எங்களைக் கைவிடல்லை. நானும் என் கணவரும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எங்களாலும் வாழ முடியும் என்று நிரூபித்து வருகிறோம் என்றார்.