தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனி ஆலயம் அமைந்துள்ள கூத்தனூர் மகா சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

 

ஆலயத்தின் சிறப்புகள் என்ன ? வழிபாடு எப்படி ?

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கூத்தனூரில்  சரஸ்வதி அம்மனுக்கு என தனி ஆலயமான மகா சரஸ்வதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என தனி ஆலயம் இங்கு தான் அமைந்துள்ளது என்பது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு. மேலும் ஒட்டக்கூத்தர் என்கிற தமிழ் புலவர் இங்கு வாழ்ந்து இந்த ஆலயத்தில் வழிபட்ட காரணத்தினால் இந்த ஊருக்கு கூத்தனூர் என்கிற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

வரலாற்று சிறப்பு மிக்க கோயில் இது

 

இத்தைகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த  கோவிலில் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெற இந்த அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டுதோறும் இந்த கோவிலின் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அதன் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறும் .

 

அந்த வகையில் இந்த வருட நவராத்திரி திருவிழா கடந்த அக்டோபர் 3ல் தொடங்கிய நிலையில் இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த ஆலயத்தில் உள்ள மகா சரஸ்வதி அம்மன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பாத தரிசன விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

ஏடும் பேனாவும் சாத்தி வழிபாடு

 

மேலும் இந்த கோவிலுக்கு வரும் மாணவ மாணவிகள் நோட்டு பேனா புத்தகம் சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.இதில் திருவாரூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரியக்கூடும் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக  நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான புதிதாக பள்ளியில் சேர்க்கக்கூடிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நெல் மணிகளில் தமிழ் உயிர் எழுத்தான அ வை எழுதி வழிபாடு நடத்தும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.