தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்தனர்.
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன் என பல்வேறு சன்னதிகள் உள்ளன.
இக்கோயிலுக்கு தஞ்சாவூர் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி பள்ளி விடுமுறை, சபரிமலை செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று விடுமுறை நாள் என்பதால் பெரிய கோயிலுக்கு காலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து குடும்பத்தோடு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகைபுரிந்தனர்.
கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் வாகனம் நிறுத்துமிடமும் நிரம்பி வழிந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் வந்த கார்கள், வேன்கள் பழைய கோர்ட் ரோடு பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டது. பெரிய கோயிலுக்கு வழக்கத்தைவிட நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் தஞ்சை ராஜப்பா பூங்கா, அரண்மனை, சரஸ்வதி மகால் உட்பட இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
ராஜப்பா பூங்காவிற்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் நவீன பொழுதுபோக்கு மையத்தினை பார்த்து ரசித்தனர்.
இன்று கிறிஸ்துமஸ் விழா என்பதால் வாகன போக்குவரத்தும் அதிகம் இருந்தது. இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகளாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதேபோல் டவுன் பஸ்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. பழைய கோர்ட் ரோடு பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. காலையில் இருந்தே அதிக சுற்றுலாப்பயணிகள் வந்த நிலையில் மதியம் சற்று கூட்டம் குறைந்திருந்தது.
மாலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகம் இருந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு இருந்தனர்.