தஞ்சாவூர்: பளபளக்குது... கலைநயத்துடன் கண்ணை கவரும் விதமாக புதுப்பொலிவு பெற்று காணப்படும் ராஜராஜ சோழன் மணிமண்டபம் எப்போது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Continues below advertisement


தஞ்சை மாநகரம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், சமுத்திரம் ஏரி போன்றவை உள்ளன. இது தவிர பொழுதுபோக்கும் இடமாக தஞ்சை சிவகங்கை பூங்கா, ராஜாளி பறவைகள் பூங்கா, ராஜப்பா பூங்கா, மணிமண்டபம் ஆகியவையும் திகழ்ந்து வருகிறது.




இதில் ராஜராஜ சோழன் மணிமண்டபம் தஞ்சை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே தஞ்சை- புதுக்கோட்டை சாலை மற்றும் தஞ்சை நம்பர் 1 வல்லம் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த மணிமண்டபம் அமைந்துள்ளது.


இந்த மணிமண்டபம் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது 1995-ம் ஆண்டு தஞ்சையில் 8-வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போ 3.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டது. இந்த மணி மண்டபத்தில் பூங்கா, கோபுரம், ராஜராஜன் அகழ்வைப்பகம் போன்றவை அமைக்கப்பட்டன. மேலும் இந்த மண்டபத்தில் புல்தரைகள், சிறுவர்களுக்கு பொழுது போக்கு அம்சமாக விளங்கியது. இங்கு சிறுவர்களுக்கான ஊஞ்சல், விளையாட்டு உபகரணங்கள் என அமைக்கப்பட்டு இடம்பெற்று இருந்தன.


இந்த மணிமண்டபத்தின் நடுவில் உள்ள கோபுரத்தில் மாடி தளங்களில் ஏறிச்சென்று பார்த்தால் தஞ்சையின் எழில் கொஞ்சும் அழகை கண்டு ரசிக்கலாம். அந்த வகையில் அற்புதமாக இந்த மணிமண்டபம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இலவசமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் நாளவடையில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த மணிமண்டபம் தஞ்சை பகுதி மக்களுக்கு மிகவும் பிடித்த இடமாக மாறியது என்றால் மிகையில்லை. முக்கியமாக வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு தஞ்சை மக்கள் மாலையில் இந்த மணிமண்டபத்திற்கு வந்தால் உற்சாகத்தோடு அந்த நாளை கொண்டாடுவர். 




இந்நிலையில் இந்த மண்டபத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும், நாளடைவில் பொலிவிழந்து காணப்பட்டது. இதையடுத்து, இந்த மண்டபத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்கள், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து, இந்த மணிமண்டபத்தை ரூ.3.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது புல் தரைகள், புதிய நடைபாதை வசதி, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ரெயில், ஊஞ்சல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தற்போது பணிகள் முடிவடையும் தருவாயில் ராஜராஜன் மணிமண்டபம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் ராஜராஜன் மணிமண்டபம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எந்த நாள் எப்போது என்ற எதிர்பார்ப்பில் தஞ்சை மக்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மணிமண்டபத்திற்கு தஞ்சை மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஆர்வமாக வந்து மாலை வேளையில் தென்றல் காற்றை அனுபவித்து தஞ்சை அழகை ரசித்து செல்வதும் வழக்கம். தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்த்துள்ளனர்.