தஞ்சாவூர்: தமிழகத்தை மீட்டெடுக்க பாஜகவால் மட்டுமே முடியும் என்று என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.


என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை தஞ்சாவூர் தொகுதியில் கொடிமரத்து மூலையில் தொடங்கி வடக்கு வீதி, மேல வீதி, தெற்கு வீதி வழியாக கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே நிறைவு செய்தார்.


பின்னர் அவர் அங்கு பேசியதாவது:


மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது 113 ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். இந்த முறை 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களுடன் மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்கவுள்ளார். அதில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச் செய்ய மக்கள் முன்வர வேண்டும். சாலை, பாலம் உள்பட ஒரு பணியும் உருப்படியாக நடைபெறவில்லை. மிக மோசமான அளவுக்கு தமிழகத்தை திமுக மாற்றி வைத்துள்ளது.


உதான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு 20 இருக்கைகள் கொண்ட விமானச் சேவை தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை பாஜக அரசுதான் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நடைப்பயணத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதூர் பகுதியில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கிய பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய வீதிகள் வழியாக ஒரத்தநாடு அண்ணாசிலை பகுதிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர் பேசுகையில், காவிரி பிரச்சினைகளை முந்தைய காலங்களில் தி.மு.க. அரசு சரிவர கையாளத காரணத்தினால் தான் கர்நாடகா தொடர்ந்து அணைகளை கட்டி விட்டது. இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.


தி.மு.க. அரசு தேர்தலின் போது அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் மாறாக 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி ஏமாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் மீதும், தமிழகத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். காவிரி பிரச்சினை, மீத்தேன் எரிவாயு போன்றவற்றில் தமிழக விவசாயிகளின் நலன் சார்ந்த விவசாய கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டார் என்றார்.


முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் இணைந்து மக்களை பார்த்து கை அசைத்தபடி நடைபயணமாக சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.