தஞ்சாவூா்: தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி கல்லணைக்கால்வாய் ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தபோது தண்ணீர் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (16). இவர் கோழிக்கறி விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் இரண்டு பேருடன் மானோஜிப்பட்டியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் கோகுலகிருஷ்ணன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று பேரும் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சட்டென்று ஆற்றில் குதித்து 2 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால் கோகுலகிருஷ்ணனை மீட்க முடியவில்லை. அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கினார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி கோகுலகிருஷ்ணனை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் எம்.கே. மூப்பனார் சாலை பகுதியில் ஆற்றில் சிறுவன் ஒருவர் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் அங்கு வந்த மருத்துவக்கல்லூரி போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த சிறுவன் உடலை மீட்டனர். தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்த சிறுவன் உடல் கோகுலகிருஷ்ணன் என்று உறுதி செய்தனர். இதையடுத்து கோகுல கிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லணைக்கால்வாய் உட்பட ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது. மேலும் தண்ணீரின் வேகம் அதிகம் இருப்பதால் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம். கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பில்லாத இடத்தில் இவ்வாறு பொதுமக்கள் குளித்து ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.