தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நடந்து செல்வதற்கு இடையூறாக நிறுத்தப்படும் பைக்குகளின் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தஞ்சை புதிய பேருந்து நிலையம் மிக முக்கியமான பகுதியாக உள்ளது. இங்கிருந்து  மதுரை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், கோவை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு மையப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நகரத்துக்குள் இயக்கப்பபடும் பேருந்துகள் சென்று வருகின்றன.


இந்த பகுதியில் இருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கும், மருத்துவக்கல்லூரிக்கும் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மட்டும் இங்கிருந்து நகர பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை. மற்ற நேரங்களில் நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சையில் இருந்து கல்லூரிகளில் படிப்பதற்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்காகவும் ஏராளமானோர் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் கொண்டு வரும் பைக்குகளை நிறுத்த ஸ்டாண்டும் செயல்பட்டு வருகிறது.


தஞ்சை நகர் பகுதியில் இருந்து பலர் பைக்குகளில் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். அப்படி வருபவர்களில் சிலர் முறையாக வாகன நிறுத்தும் இடத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். சிலர் பேருந்துகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பைக்குகளை பயணிகள் அமர்வதற்காக கட்டப்பட்டுள்ள இருக்கைகள் பகுதியில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். காலையில் பைக்குகளை நிறுத்தவிட்டு சென்றால் மாலையில் வந்து தான் அதை எடுத்து செல்கின்றனர்.


புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வருபவர்களும் ஆங்காங்கே பைக்குளை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் பல்வேறு சிரமதிற்கு ஆளாகி வருகின்றனர். பட்டுக்கோட்டை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் பைக்குகளை வரிசையாக நிறுத்திவிட்டு செல்வதால் பேருந்துகள் அதற்குரிய இடத்தில் நிற்காமல் வேறு இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கிறது.


இதனால் மற்ற பேருந்துகள் வந்து செல்வதற்கும் சிரமமாக இருக்கிறது. அதேபோல் பயணிகள் நடமாடக்கூடிய இடங்களிலும் பைக்குகளை வரிசையாக நிறுத்திவிட்டு செல்வதால் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே ஒரு வாகன நிறுத்தம் இருக்கும் நிலையில் அந்த வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்கள்  நிரம்பி வருவதால் திறந்தவெளியில் தான் வாகனங்களை நிறுத்தக்கூடிய நிலை உள்ளது.


இதை கருத்தில் கொண்டும் சிலர் அங்கே வாகனத்தை நிறுத்தாமல் பயணிகள், பேருந்துகளுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். எனவே பேருந்துகள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுப்பதுடன், கூடுதலாக  வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் தான் இருசக்கர வாகனங்கள் இடையூறாக நிறுத்துவதை தவிர்க்க முடியும். மேலும் போக்குவரத்து பிரிவு காவலர்கள் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு இடையறாக வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர் மீது அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறுகையில், பயணிகள் நடப்பதற்கும், பேருந்துகள் வரும் வரை காத்திருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் பகுதிவரை பைக்குகளை நிறுத்தி உள்ளனர், இதனால் நடந்து செல்லவும் பெரும் அவதியாக உள்ளது. காலை முதல் இரவு பணி முடிந்து அந்த பைக்குகளின் உரிமையாளர்கள் வந்து எடுத்தால்தான் அந்த இடம் காலியாகும். இப்படி அனைத்து தரப்பினருக்கும் அவதியை அளித்து வருகின்றனர். எனவே இனியும் இது போல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.