தஞ்சாவூர்: புனித அன்னை தெரசாவின் 114-வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் 200 மாணவர்களுக்கு ரூ.19.50 லட்சம் கல்வி உதவித்தொகையை தஞ்சை மதர்தெரசா பவுண்டேசன் வழங்கியது.
மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் புனித அன்னை தெரசாவின் 114-வது பிறந்தநாள் விழா தஞ்சை மாதாக்கோட்டையில் நேற்று மாலை நடந்தது. பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து வரவேற்றார். திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் தலைமை வகித்து மதர் தெரசா பவுண்டேசன் மூலம் கல்வி உதவி பெற்று 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த 14 மாணவர்களை கவுரவித்தார்.
தஞ்சாவூர் எம்.பி., முரசொலி 11 கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பட தேவையான உபகரணங்களையும், தள்ளுவண்டி, தையல் எந்திரங்களையும் வழங்கி பேசினார்.
மதர்தெரசா கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் நலிவுற்ற குடும்பத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.19 லட்சத்து 64 ஆயிரத்து 500-க்கான காசோலைகளை வீரக்குறிச்சி மேக்ஸ் அருள் பவுண்டேசன் நிறுவனர் அருள்சூசை வழங்கி, பவுண்டேசன் சேவை பணிகளை பாராட்டினார். தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினர் ரேணுகா ஆலிவர் முன்னிலை வகித்து, புதிதாக 2 கைம்பெண்கள் குழுக்களை தொடங்கி வைத்து, மதர்தெரசா நலவாழ்வு மையத்தில் கைம்பெண்கள் சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெற ஒற்றை மதர் பராமரிப்பு என்ற சலுகை கட்டண அட்டையை அனைத்து கைம்பெண்களுக்கும் வழங்கினார்.
ஷார்ஜா அரசு சிறப்பு திட்டங்கள் இயக்குனர் எட்வின் மரியஅரசு காணொலிக்காட்சி மூலம் பேசினார். ஆன்மீகத்துறையில் ஆற்றி வரும் பணிகளை பாராட்டி வீரக்குறிச்சி மேக்ஸ் அருள் பவுண்டேசன் நிறுவனர் அருள்சூசைக்கு மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் கிங் சாலமன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். பின்னர் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் இன்றைய காலக்கட்டத்தில் மனிதநேயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இதையடுத்து வீரக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜோசப் குழந்தைசாமி ஆசியுரை வழங்கினார். விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் நடராஜன், முன்னாள் தொழில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் பாலசுந்தரம் மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அறங்காவலர் சம்பத் ராகவன் நன்றி கூறினார்.
முன்னதாக மதர்தெரசா பவுண்டேசன், ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியுடன் இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. முகாமை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி முன்னிலையில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். இதில் 150-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மதர் தெரசா பவுண்டேசன் நிறுவனர் சவரிமுத்து தலைமையில் அறங்காவலர்கள் சம்பத்ராகவன், கோவிந்தராஜ், முரளிகிருஷ்ணன், மக்கள் தொடர்பு இயக்குனர் ஜார்ஜ், திட்ட இயக்குனர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, ரேணுகா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டி, அமிர்தவர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர். மன்னார்குடி பான்செக்கர்ஸ் கல்லூரி முதல்வர் விக்டோரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
புனித அன்னை தெரசாவின் அன்பு வழியைப் பின்பற்றி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002ஆம் ஆண்டு முதல் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சமூகப் பணிகளை குறிப்பாக கல்விப் பணி, மருத்துவப் பணி, முதியோர்களை பேணும் பணி போன்றவற்றைச் செய்து வருகிறது.