தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று காலை நடக்க இருந்த குழந்தை திருமணத்தை கலெக்டர் உத்தரவின் படி சமூக நலத்துறை அலுவலக ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டார்.
தஞ்சை அருகே சாலியமங்கலம் கீழ ரயில்வே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து திருமண பத்திரிகை அடிக்கப்பட்டு தஞ்சையில் திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7.30 மணிக்கு திருமணம் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி எதிரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. ஆனால் மணப்பெண்ணான சிறுமிக்கு உரிய திருமண வயது ஆகவில்லை என்று ரகசிய தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றார். மேலும் தஞ்சை அனைத்து மகளிர் போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றனர்.
தொடர்ந்து சிறுமியிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் மணப்பெண்ணான சிறுமிக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர். அங்கு சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
அந்த சிறுமிக்கு தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்படும். மேலும் அந்த சிறுமி குடும்பத்தினர் கண்காணிக்கப்படுவர். இடையில் மீண்டும் இதுபோல் ரகசியமாக திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சரியான நேரத்தில் சென்று திருமணம் நடப்பதற்கு முன்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்