தஞ்சாவூர்: தஞ்சையில் குடிபோதையில் வாலிபரை படுகொலை செய்து முகத்தை சிதைத்து விட்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த 3 பேரும் நேற்று முன்தினம் மாலை கரந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (23). கஞ்சா வியாபாரி என்று கூறப்படுகிறது. இவர் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரீப் வீட்டில் இருந்போது அவரை 3 வாலிபர்கள் வந்து அழைத்துள்ளனர்.

வீட்டிற்குள் இருந்து பிரதீப் வெளியே வந்துள்ளார். அவரிடம் அந்த 3 வாலிபர்களும் ஏதோ விபரம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த 3 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் பிரதீப்பை சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பிரதீப் சம்பவ இடத்திலேயே இறந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த 3 பேரும் பிரதீபின் முகத்தை சிதைத்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரதீப் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரதீபை வெட்டி கொலை செய்தது கரந்தை பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் விக்னேஷ் (26), கீழ அலங்கம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சிவக்குமார் (25), வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சூர்யா என்பது தெரிய வந்தது.

உடன் விக்னேஷ் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை கரந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடன்கேட்டு ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும் ஆயுதங்களை காட்டி தாக்கவும் முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ‘இதுபோன்ற சம்பவங்கள் மது போதையினால் ஏற்படுகிறது. மேலும் இளம் வயதினர் தற்போது போதைக்கு அடிமையாகி ஆயுதங்களை தூக்குகின்றனர். இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை முழுமையாக போதையினால் அழிந்து போய்விடுகிறது. தஞ்சை பகுதியில் இதுபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மளிகைக்கடைக்காரரிடம் போதையில் கடன் கேட்டு அவரை வெட்டி கொலை செய்த சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது’ என்று தெரிவித்தனர்.