தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை தாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவ்வாறு வழங்கப்படும் அரிசிகள் மிகவும் தரமற்றதாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் ஏழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. மனிதர்கள் சமைத்து சாப்பிடமுடியாத வகையில், புழு, பூச்சிகள் மிகுந்து காணப்படுவதாக ஏழை எளிய மக்கள் பலரும் பல ஆண்டுகளாக வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டும், அரிசியை சாலையில் கொட்டியும், தரமான அரிசி வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் இது குறித்து அரசு பெரிதளவில் செவிசாகாமல், தொடர்ந்து தர மற்ற அரிசியை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளையும் பொதுமக்கள் தெரிவிக்கின்றன.
செறிவூட்டப்பட்ட அரிசி
தரமற்ற அரிசி ரேஷன் கடைகளில் வழங்குவது ஒருபுறம் இருக்க, தற்போது மக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்க வேண்டும் என கூறி செறிவூட்டப்பட்ட அரிசி மறுபுறம் மக்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அரசு வினியோகம் செய்து வருகின்றது. இதனால் செறிவூட்டப்பட்ட அரிசி தங்களுக்கு வேண்டாம் என பலரும் போர்க்கொடி தூக்கி பல இடங்களில் அரிசியை வட்டாட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரிசியை சாலையில் கொட்டிய பொதுமக்கள்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். இதனை சிறிதும் பொருட்படுத்தாத அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து தரமற்ற அரிசியை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சூழலில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பயனாளி ஒருவர் அரிசி வாங்கியுள்ளார்.
அப்போது வாங்கிய அரிசி கண்ட அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அரிசி முழுவதும் ஏராளமான புழுக்களும், பூச்சிகளும் வெள்ளை, கருப்பு என பல நிறங்களில் நெளிந்து ஓடியுள்ளது. அந்த அரிசி நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் பயனாளிகளுக்கு வழங்கியதும், அதில் புழுக்கள் நிறைந்து இருந்ததும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயனாளி தான் வாங்கிய புழுக்கள் நிறைந்த அரிசியை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் கடை ஊழியரின் விளக்கம்
மேலும், இதுகுறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டபோது, அரிசி இவ்வாறு தரமற்று இருப்பதாக எழுதி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளதாகவும், இந்த அரிசியை எடுத்துக்கொண்டு மாற்று அரிசி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், அதுவரை இருக்கும் அரிசியை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் வழங்கி வருவதாக கூறியுள்ளார். ஆனால் பொதுமக்கள் கூறுகையில், கடந்த பல மாதங்களாக அரிசி தரம் குறித்து கேட்கும் போதெல்லாம் நல்ல அரிசி வந்தவுடன் தருகிறேன் எனக்கூறி பல மாதங்களாக அரிசி தராமல் ஏமாற்றி வருகின்றனர் என தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.