தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் விஜயதசமியை ஒட்டி மாணவர்கள் சேர்க்கை மிகவும் உற்சாகத்துடன் நடந்தது.


வெற்றி வாகை சூடிய  விஜயதசமி


வருடம்தோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் 9 நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும். நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்த வகையில் அன்னை சக்திதேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர். மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.


அரக்கன் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்ற நாளே விஜயதசமியாகும். விஜய் – என்றால் வெற்றி; தசமி என்றால் – பத்து (தசம் = பத்து). இதனையே விஜயதசமி என கொண்டாடுகிறோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.


குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி கற்றுத்தரும் நாள்


குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். மேலும் விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம். இதனால்தான் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று கல்வி கற்று தருதல் அவர்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.


கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் தினமான விஜயதசமி நாளன்று பெற்றோர் தங்களது குழந்தைகளை முதல்முதலில் பள்ளிகளுக்கு அனுப்புவது வழக்கம். அன்றைய தினத்தில் இருந்து பள்ளிக்குச் சென்றால் எதிர்காலத்தில் மாணவர் கல்வியில் சிறந்தவராக விளங்குவர் என்பது பெற்றோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.


பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் வருகை


அந்த வகையில் விஜயதசமியான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து முதல் நாள் வருகை பதிவு செய்தனர். நவராத்திரி விழாவின் கடைசி நாளான இன்று வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று, பாரம்பரியமான முறையில் குழந்தைகளுக்கு எழுத்து கற்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.


அட்சரப்யாசம் என்ற எழுத்து கற்றல் நிகழ்ச்சி


ஒரு தட்டில் அல்லது தரையில் நெல்மணிகளைப் பரப்பி, அதில் குழந்தைகளின் விரல் பிடித்து அ என்ற முதல் எழுத்தை எழுதச் செய்து கற்பிக்கும் அட்சரப்யாசம் என்ற எழுத்து கற்றல் நிகழ்ச்சி, தமிழகம், கேரளம், கர்நாடகம் உட்பட தென்மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு முதல் மூன்று வயதுள்ள குழந்தைகளை சிறார் பள்ளிகளில் சேர்க்க பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ந்த ஆர்வத்துடன் பெற்றோர் திரண்டனர். அந்த வகையில், தஞ்சை அரசர் பள்ளியில் உற்சாகமாக சிறப்பு வழிபாடுகளுடன் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சரஸ்வதி தேவி படம் அலங்கரித்து வழிபாடுகள் நடத்தப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் குமார் குழந்தைகளுக்கு எழுத்து கற்பிக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை நெல்லில் அ என்ற முதல் எழுத்தை எழுத பழகி கொடுத்தனர்.


நவதானியங்களில் அ எழுதி பழகிய குழந்தைகள்


நெல், பச்சரிசி ஆகியவற்றில் அட்சரம் எழுதி குழந்தைகள் கல்வியை தொடங்கினர். இதேபோல் பல்வேறு பள்ளிகளும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, எள், உளுந்து, கொள்ளு, மொச்சை போன்ற நவதானியங்களில் குழந்தைகள் அ எழுதி தங்களது கல்வியை தொடங்கினர்.


ஆசிரியைகள் குழந்தைகளின் கைகளை பிடித்து தமிழ் எழுத்துக்களான உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துக்களையும் எழுத வைத்து அவர்களின் கல்வியை தொடக்கி வைத்தனர்.