தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.


மாற்றுத்திறனாளிகளுக்கான கண்காணிப்பு குழு கூட்டம்


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறன் படைத்தவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டி வாக்களிக்க ஏதுவாக உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான மாற்றுத்திறன் வாக்காளர் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கலந்தாய்வு மேற்கொண்டார்.


தடையற்ற பாதை அமைப்பு


வாக்குச்சாவடி மையம் தரைத்தளத்தில் அமைந்துள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டுமெனவும். நுழைவாயில் வெளியேறுதல் மற்றும் வாக்களிக்கும் பெட்டி வரை தடையற்ற பாதை அமைக்கப்பட்டுள்ளதா என கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலிகளில் கைப்பிடி போன்ற அனைத்து வசதிகளும் உரிய முறையில் பராமரிப்பில் இருக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்திட அறிவுறுத்தினார்.


சாய்வு பாதையானது குறுக்குவெட்டு இல்லாமல் சீராக இருப்பதை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளி உறுதி வாக்காளர்களுக்கு உதவ பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் மற்றும் காவலர்கள் வாக்குச் சாவடி மையத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்யவும். சக்கர நாற்காலி மற்றும் தன்னார்வலர்களுடன் விதிகளின்படி உதவியாளர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதால் அதனை நடைமுறைப்படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 


மாற்றுத்திறன் குறைபாடுடையவர்களுடன் உதவியாளர்கள்


அடையாள அட்டையுடன் வரும் மாற்றுத்திறனாளிகள் வெளியே தெரியாத மாற்றுத்திறன் குறைபாடுடையவர்கள் உதவியாளருடன் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், பார்வைக்குறைபாடுயுடைய வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்களிக்கும் பெட்டியில், தாங்களே தொட்டு உணர்ந்து வாக்களிக்க ஏதுவாக பிரெய்லி மொழி அடையாளத்தை பயன்படுத்த வேண்டும்.


மாற்றுத்திறனாளிகள் வாக்குசாவடிக்கு வாக்களிக்க வரும்போது அவர்களை உடனடியாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வரிசையில் நிற்க வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. வாக்களிக்க ஏதுவாக உரிய வசதிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


சாய்வு நாற்காலிகள் 1184 வாக்குச்சாவடி மையங்களிலும் ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டி வாக்களிக்க ஏதுவாக ஏதேனும் குறைகள் இருந்தால் Saksham ECI எனும் செயலி மற்றும் வாக்காளர் உதவி மைய எண். 1950 வழியாக பதிவு செய்து தீர்வு பெறலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சதாசிவம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.