தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் தங்களின் மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இடைவிடாது நடக்கும் மீன்பிடி தொழில்


3,000-த்துக்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதிகளாக வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினைப் பகுதிகள் உள்ளன. ஆண்டுதோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடந்து வந்தது. இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குன்றத் தொடங்கியது. இதன் விளைவாகக் கடல் வாழ் உயிரினங்களின் உருவாக்கம் குறைந்து போனது. இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மீன்வளம் அறவே அழிந்து போகும் நிலை உருவாகும் என ஆராய்ச்சியாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டது.


மீன் உற்பத்தி காலங்களில் மீன்பிடிக்க தடை


இதைத் தடுக்க மீன் உற்பத்திக் காலங்களில் கரையிலிருந்து 3 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்கச் செல்வதற்குத் தடை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 45 நாள்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்க நடவடிக்கை எடுத்தது. ஏப்ரல் 15 முதல் மே 29 வரையிலான 45 நாள்கள் மீன்பிடி தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் தடை நாள்களின் எண்ணிக்கை கடத சில ஆண்டுகளாக 45 நாளில் இருந்து 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது.




மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் மீனவர்கள்


அந்த வகையில் இந்தாண்டும் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் கட லுக்கு சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தியுள்ள விசைப்படகுகளில் இருந்து மீன்பிடி உபகரணங்களை இறக்கி மீனவர்கள் பழுதுநீக்கி பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றகள்.


 


61 நாட்கள் தடைக்காலம்
 


மத்திய, மாநில அரசுகள் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு வரை ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதித்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதித்து நடைமுறைபடுத்தி வருகிறது.


 


துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்


 


இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதையொட்டி தஞ்சை  மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 147 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடி தொழிலாளர்கள், மீன்வியாபாரிகள், துறைமுகங்களில் கடைவைத்து தொழில் நடத்துபவர்கள், கருவாடு வியாபாரிகள், ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர்.


இந்நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தியுள்ள விசைப்படகுகளில் இருந்து வலை, ஐஸ் பெட்டி போன்ற உபகரணங்களை 61 நாட்கள் தடை என்பதால் வீட்டிற்கு எடுத்து சென்று மீனவர்கள்  பழுதுநீக்கி பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.