தஞ்சாவூர்: இந்தாண்டு அத்தியாவசியமான மற்றும் உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர் வாருவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பாசனதாரர்களும் பாராட்டும் வகையில் தூர் வாரும் பணிகள் அமையும். நடப்பாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்காலில் தூர் வாரும் பணியை நேற்று மாலை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு 12 மாவட்டங்களில் தூர் வாருவதற்காகத் தமிழக அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 12 மாவட்டங்களில் எந்தெந்த வேலையை எடுத்து செய்வது என முன்கூட்டியே அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். அத்தியாவசியமான மற்றும் உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆனந்த காவேரி வாய்க்காலுக்கு தூர் வாருவதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர் வாருவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த முறை 834 மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு 4 ஆயிரத்து 773 கி.மீ. தூர் வாரப்பட உள்ளது. கடந்த ஆண்டு தூர் வாரும் பணியை நீர்வளத்துறை அலுவலர்கள் மட்டுமல்லாமல், அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. நீர்வளத் துறைச் செயலரும், மாவட்ட கலெக்டர்களும் மற்ற அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பணிகள் செய்தது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்களைப் பார்வையாளர்களாக அனுப்பி பணிகளை கவனிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். கடந்த முறை தூர் வாரும் பணி மக்கள் பாராட்டும் வகையில் அமைந்தது போல, இந்த முறையும் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பாசனதாரர்களும் பாராட்டும் வகையில் தூர் வாரும் பணி அமையும். நடப்பாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், நீர் வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நீர் வளத் துறைத் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ். ராமமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். கடந்தாண்டு மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தூர்வாரும் பணிகள் சரிவர நடக்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அதனால் தற்போதே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.