திருவாரூரில் அரசு அலுவலர்கள் மூன்று பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

விழுப்புரம் சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனராக இருப்பவர் முத்துமீனாட்சி. இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்தார். அப்போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்கியதும், அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர். 

 

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முத்துமீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, உதவியாளர் கார்த்தி மற்றும் அடியக்கமங்கலம் பகுதியைச் சார்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், கடலூர் சேர்ந்த சுகுமாரி ஆகிய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 



 

அதன் அடிப்படையில் திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனில் உள்ள முத்து மீனாட்சியின் வீட்டில் இருபதுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் நடைபெற்ற முறைகேட்டிற்கு உதவியாக இருந்ததாக கூறி அப்போதைய அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலரும், தற்போதைய விளமல் கிராம நிர்வாக அலுவலருமான துர்காராணி என்பவர் வசித்து வரும் விளமல் சிவன் கோயில் நகரில் உள்ள அவரது வீட்டிலும், மேலும் அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி என்பவரின் அடியக்கமங்கலத்தில் உள்ள அவரது வீட்டிலும், தஞ்சாவூரில் உள்ள நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

 

இந்த நிலையில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த விழுப்புரம் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் முத்துமீனாட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருப்பது திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.