தஞ்சாவூர்: கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த போது காணாமல் போன முதியவர் வல்லத்தில் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் மின்நகர் அருகே சாலையில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் எங்கு செல்வது என்று தெரியாமல் தடுமாறியபடியே வழியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த வல்லம் போலீசார் மணிகண்டன், சசிகுமார் ஆகியோர் அந்த முதியவரிடம் விசாரித்தபோது அவருக்கு தமிழ் தெரியவில்லை. அந்த முதியவர் இஸ்லாமியர் அணியும் தொப்பி அணிந்திருந்ததால் வல்லம் ஜூம்மா பள்ளிவாசலுக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் முதியவரிடம் சமூக ஆர்வலர்கள் ரியாசுதீன், பாட்ஷா ஆகியோர் விசாரித்தபோது அவர் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த முகமது என்பது தெரிய வந்தது. அவரது குடும்பத்தினர் 20 பேர் 2 நாட்களுக்கு முன்பு வேனில் தமிழகத்தில் உள்ள தர்காகளுக்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 23ம் தேதி திருச்சி நத்தர்ஷா தர்காவுக்கு வந்த போது முதியவர் குடும்பத்தினரை விட்டு பிரிந்து விட்டார். தன் குடும்பத்தினர் அடுத்ததாக முத்துப்பேட்டை தர்காவுக்கு செல்ல முடிவு செய்திருந்தது முதியவருக்கு முன்பே தெரிந்திருந்ததால் திருச்சியிலிருந்து தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

முத்துப்பேட்டைக்கு எந்த பஸ்சில் செல்வது என்பதும் தெரியவில்லை. மொழியும் புரியதாததால் யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமல் வல்லத்திற்கு நடந்தே வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களில் முதியவரின் புகைப்படம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்து பதிவிடப்பட்டது.

இந்நிலையில் முத்துப்பேட்டையில் இருந்த முதியவரின் குடும்பத்தினருக்கு இந்த தகவல் சமூக வலைதளம் வாயிலாக தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு வல்லத்திற்கு வந்தனர். பின்னர் வல்லம் போலீஸார் மணிகண்டன், சசிக்குமார் ஆகியோர் முன்னிலையில் முதியவர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருச்சியில் முதியவர் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டு இருந்ததால் அதை திரும்ப பெற்றுக் கொள்ள திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

வழி தெரியாமல் தடுமாறி நின்ற முதியவரை மீட்டு அவர் குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு சமூக வலைதளம் வாயிலாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொண்ட சமூக ஆர்வலர்கள் ரியாசுதீன், பாட்ஷா மற்றும் வல்லம் போலீசார் மணிகண்டன், சசிகுமார் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதனால் நன்மை ஏற்படும் என்பதற்கு குடும்பத்தை விட்டு பிரிந்த முதியவர் மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்ததே சாட்சியாகும். மேலும் மனிதாபிமானம் மிக்கவர்கள் இன்னும் இருக்கின்றனர் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது என்றும் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண