தஞ்சாவூர்: மிகக் குறைந்த நேரத்தில் 46 பேருக்கு புற்றுநோய் கண்டறிதல் குறித்த ஸ்கேனிங் செய்து ஆசிய சாதனை பதிவேட்டில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை தங்களின் பெயரை வலுவாக பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் டெல்டா பிராந்தியத்தில் புகழ்பெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர், ஒரு மணி நேரத்திற்குள் அதிக எண்ணிக்கையில், LDCT (குறைந்த அளவு கதிர்வீச்சு திறன் கொண்ட CT ஸ்கேன்) வழியாக நுரையீரல் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனைகளை மேற்கொண்டதன் மூலம் ஒரு புதிய சாதனையைப் பதிவு செய்திருக்கிறது.
கடந்த 8-ம் தேதியன்று உலகெங்கிலும் அனுசரிக்கப்படும் சர்வதேச கதிரியக்கவியல் தினமன்று தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் கதிரியக்கவியல் மற்றும் இமேஜிங் அறிவியல் துறையின் தீவிர முயற்சியின் காரணமாக, இச்சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வின்போது நுரையீரல் புற்றுநோய்க்கு அதிக இடர்வாய்ப்புள்ள 46 நபர்களுக்கு வெற்றிகரமான ஸ்கிரீனிங் சோதனை ஒரு மணி நேர காலஅளவிற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. LDCT ஸ்கேனர்களைப் பயன்படுத்தி கதிரியக்கவியல் நிபுணர்களின் குழு இச்சாதனையை செய்திருக்கிறது.
LDCT என்பது, நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான அதிக இடர்வாய்ப்பிலுள்ள நீண்டகாலம் புகைபிடிக்கும் வரலாறு உள்ள நபர்கள் அல்லது முதிர்ந்த வயதுள்ள நபர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு சிறப்பு ஸ்கிரீனிங் செயல் உத்தியாகும். இம்மருத்துவச் செயல்முறை மிக துரிதமானது, உடலுக்குள் ஊடுருவல் அல்லாதது மற்றும் கதிர்வீச்சுக்கு வெளிப்படுவதை மிகவும் குறைக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் சாத்தியமுள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியுமென்பதால் சிகிச்சையை விரைவில் தொடங்கி சிகிச்சைப் பலன்களை மேம்படுத்த முடியும்.
இதுகுறித்து மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர், இச்சாதனையின் நிகழ்வு குறித்து கூறியதாவது: “நோய் வராமல் தடுக்கும் உடல்நல பராமரிப்பு மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்புகளை கண்டறிவதில் எமது அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டு வலியுறுத்துவதால் நுரையீரல் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங்-ல் இந்த மைல்கல் சாதனையை நிகழ்த்தியிருப்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்.
அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு LDCT ஸ்கிரீனிங் சோதனைகளை மேற்கொள்வதன் வழியாக எமது நோயாளிகள் சிகிச்சையின் மூலம் உயிர்பிழைப்பு விகிதங்களை மேம்படுத்துவதும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் எமது நோக்கமாகும். சர்வதேச கதிரியக்கவியல் தின அனுசரிப்பு நாளன்று இச்சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. அத்துடன் எமது கதிரியக்கவியல் துறையின் மேம்பட்ட தொழில்நுட்ப திறன்கள் மற்றும் எமது மருத்துவக் குழுவினர் அர்ப்பணிப்பிற்கு சான்றாக திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மீனாட்சி மருத்துவமனை கதிரியக்கவியல் துறை தலைவரும், முதுநிலை மருத்துவருமான டாக்டர் சண்முக ஜெயந்தன் கூறுகையில், நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “உலகளவில் புற்றுநோயோடு தொடர்புடைய உயிரிழப்புகளில் முதன்மை காரணங்களுள் ஒன்றான நுரையீரல் புற்றுநோய் தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் LDCT ஸ்கிரீனிங் சோதனை வழியாக ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிவதன் மூலம் உரிய நேரத்திற்குள் இடையீட்டு சிகிச்சையை நம்மால் தொடங்க முடியும்; இதன் மூலம் நோயாளிக்கு கிடைக்கும் சிகிச்சை விளைவுகளை கணிசமாக மேம்படுத்த இயலும். மார்பக புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங்கிக்கு மேமோகிராம்கள் பயன்படுத்தப்படுவதைப் போல நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கு ஒரு அத்தியாவசிய கருவியாக LDCT பயன்படுகிறது.
சர்வதேச கதிரியக்கவியல் தினமான நவம்பர் 8-ம் தேதியன்று பழைய சாதனைகளைத் தகர்த்து புதிய சாதனையைப் படைக்கும் இந்நிகழ்வு எமது மருத்துவமனையில் நடைபெற்றிருக்கிறது. நுரையீரல் புற்றுநோய்க்கு அதிக இடர்வாய்ப்புள்ள பிரிவினருக்கு LDCT ஸ்கிரீனிங் சோதனை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக இந்நிகழ்வு இருக்கிறது; நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை விளைவுகளை வழங்க தொடக்க நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டத்திற்கு இணக்கமானதாகவும் இச்சாதனை இருக்கிறது” என்றார்.
இந்த சிறப்பான சாதனையானது ஆசிய சாதனைகள் ஏடு என்ற கவுரவமிக்க செயல்தளத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்படும் மிகச்சிறப்பான சாதனைகளை கவுரவிக்கும் நோக்கத்தோடு India Book of Records மற்றும் Vietnam Book of Records ஆகியவை உட்பட பல்வேறு நாடுகளுக்கான சாதனைப் பதிவு அமைப்புகளோடு Asia Book of Records அமைப்பு செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.