தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் சிவகங்கை பூங்கா நுழைவுக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.


மாநகராட்சி கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:


ஜெ.வி. கோபால் (அதிமுக): சிவகங்கை பூங்காவில் நுழைவுக் கட்டணம் ரூ.40 வசூலிக்கப்படுகிறது. ஆனால் பூங்கா நுழைவு வாயிலில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிய பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது.


மேயர்: சிவகங்கை பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 20-ம், சிறுவர்களுக்கு ரூ. 10-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பூங்கா நுழைவு வாயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அத்துறையினர் மூலம் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க முயற்சி செய்து வருகிறோம். புதிய பேருந்து நிலையத்தைப் புது வடிவமைப்பில் முழுமையாக சீரமைக்க ரூ. 50 கோடி அரசிடம் கோரப்பட்டுள்ளது. அந்த ஒதுக்கீடு கிடைத்தவுடன் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.


கே. மணிகண்டன் (அதிமுக): அருளானந்தம்மாள் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் மனைப் பிரிவு போடப்பட்டுள்ளது. இதை மனைப் பிரிவாக மாற்றுவதற்கு முறைப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டதா?
ஆணையர்: இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி இக்கூட்டத்தில் விவாதித்தால் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துவிடும்.


மேயர்: தவறான தகவலை சொல்ல வேண்டாம்.


தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அது பற்றி பேச வேண்டியதில்லை என திமுக உறுப்பினர்கள் பலரும் குரல் எழுப்பினர். இதை எதிர்த்து அதிமுக உறுப்பினர்களும் பேசியதால், கூட்டத்தில் சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது.


இதையடுத்து, அதிமுக, அமமுக, பாஜகவை சேர்ந்த 8 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


துணை மேயர் அஞ்சுகம் பூபதி: புதிய பேருந்து நிலையத்தில் முழுமையான சீரமைப்பு பணி தொடங்கப்படும் வரை தண்ணீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆணையர்: இது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.