தஞ்சாவூர்: அமைச்சரின் திடீர் ஆய்வு பள்ளி மாணவ, மாணவிகளை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எங்கள் பள்ளிக்கு அமைச்சர் வந்தாரே என்று உற்சாகமாக சொல்ல வைத்து விட்டது.


சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி
 
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


திருவாரூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக, ராமநாதபுரம் நோக்கிச் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்று கொண்டிருந்தார்.


திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்


அப்போது பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியை பார்த்தவுடன் சட்டென்று தனது வாகனத்தை நிறுத்த அறிவுறுத்திய அமைச்சர்  முன்னறிவிப்பின்றி திடீரென பள்ளிக்குள் சென்று ஆய்வு செய்தார். 




பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல்


அமைச்சரின் திடீர் வருகை பள்ளி ஆசிரியர்களை திக்குமுக்காட செய்தது. ஆனால் அதை பற்றி கண்டுக்கொள்ளாத அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். அமைச்சர் மாணவ, மாணவிகளிடம், "கல்வி ஒன்று தான் உயர்வுக்கு வழி. எனவே மாணவர்கள் இந்த வயதில் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்" என அறிவுறுத்தினார். மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 


234/ 77 திட்டத்தில் திடீர் ஆய்வு நடத்தும் அமைச்சர்


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/ 77 என்ற திட்டத்தின் கீழ், தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட எவருக்கும் தகவல் தெரிவிக்காமல் திடீரென சென்று ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் சேதுபாவாசத்திரம் பகுதியில் 196 ஆவது ஆய்வை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பள்ளி ஆசிரியர்களிடம் அவர் பேசியபோது, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக அப்போது உறுதியளித்தார். 


பள்ளிகளில் உள்ள குறை, நிறைகளை கண்டறிதல்


பள்ளிகளில் உள்ள குறைகள் மற்றும் நிறைகளை கண்டறிந்து, 100 நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இருக்கும் பள்ளிகளை சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆய்வு செய்வதற்கான ‘234/77’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி உள்ள என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்த முதல் பெருமையை அன்பில் மகேஷ் விரைவில் தட்டிச் செல்லவுள்ளார். இதற்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த எந்த அமைச்சரும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத் திட்டத்தை வகுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளிகளின் அடிப்படை கட்டுமானமும், மாணவர்களின் கற்றலும் மேம்பாடு அடைய வேண்டுமென்றால் களத்தில் இறங்கி அவர்களுடன் உரையாட வேண்டும். களத்தில் செயலாற்ற வேண்டும். அதற்காகவே தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் நோக்கத்தோடு 234/77 ஆய்வுப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது திடீர் ஆய்வு பயணத்தை யாருக்கும் தெரிவிப்பது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த பள்ளிக்கு அமைச்சர் எப்போது வருவார் என்பது தெரியாததால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.