தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் தாஜுதீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தற்போது டீசல் விலை உயர்வு மற்றும் விசைப்படகு, நாட்டுப்படகு இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி நாட்டுப்படகுகள் தொழில் புரிவதால் விசைப்படகு உரிய நாட்களில் விசைப்படகு தொழில் செய்யும் போது நாட்டுப்படகு வலைகளில் சிக்கி விசைப்படகுகள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் விசைப்படகுகள் தொழில் செய்ய முடியாமலும் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் படகுகளே தொழிலுக்கு செல்கிறது. அவற்றையும் அதிக நஷ்டம் ஏற்படுவதால் சரியாக இயக்க முடிவதில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.




இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டங்களில் எடுத்துக்கூறியும் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். மேலும் மீன் துறையினர் உங்களுக்கு மாற்று தொழில் செய்ய ஏதும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறார்கள், எங்களால் இந்த சின்ன படகு வைத்தே தொழில் புரிய முடியவில்லை. ஆழ்கடல் மீன்பிடிப்பு படகை வாங்கி என்ன செய்வது. அதற்கு தகுந்த மீன்பிடிப்பு ஆட்களும் எங்களிடம் இல்லை. ஏற்கனவே வாங்கி வைத்துள்ளவர்கள் ஆழ்கடல் படகுகள் அந்தந்த துறைமுகத்தில் தொழில் நஷ்டம் ஏற்பட்டு தொழிலுக்குச் செல்லாமல் கட்டிய கிடைக்கிறது.


இதனால் மீனவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வங்கிக்கடன் கூட கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். இது போன்ற அவல நிலை எங்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என மீன்வள அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எங்களுக்கு மாற்று தொழில் செய்ய எங்கள் அருகாமையிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டம் போல் 2 நாள் முதல் 5 நாட்கள் வரை தூரம் வரை கடலுக்குள் சென்று தங்கி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். டீசல் விலை உற்பத்தி விலைக்கு மீனவர்களுக்கு வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அரசு செய்து கொடுத்தால் நாட்டுப்படகு, விசைப்படகு இடையே பிரச்சினையின்றி தொழில் புரியவும் விசைப்படகு நஷ்டம் இன்றி தொழில் புரியவும் வழி வகுக்கும் இவற்றை அரசு செய்து தர வேண்டும் என கூட்டத்தில் விவாவதிக்கப்பட்டது.


பின்னர், மீனவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து தற்போது வாழ்விழந்து தவித்து வரும் ஆயிரக்கணக்கான மீனவர்களை காப்பாற்ற வேண்டும். படகுகளை தொடர்ந்து நஷ்டத்துடன் இயக்க முடியாத காரணத்தினால் தமிழக அரசு நிரந்தர முடிவு எடுக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி விசைப்படகுகள் மீனவர்கள்  தொழிலுக்கு செல்லாமல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு காலதாமதப்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகாத பட்சத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


 


இது குறித்த மீனவர்கள் கூறுகையில், எங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து மீன்வள துறை அதிகாரிகளிடம் கூறி எந்தவிதமான பலனும் இல்லாமல். நாட்டுப்படகு வலையில் சிக்கி விசைப்படகுகள் சேதமாகிவிடுகின்றது. அதன் பிறகு சீர் செய்ய பல ஆயிரங்கள் செலவாகின்றது. மேலும் டீசல் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால், மீன்பிடிக்க கடலுக்கு சென்றாலும், போதுமான வருமானம் கிடைக்கவில்லை. எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றோம்.  எனவே, எங்களின் கோரிக்கையை தமிழக அரசு, நிறைவேற்ற  வேண்டும் என காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றார்.