தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் இறப்பு, ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜூன் 30 ஆம் தேதி வரை காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 32 பதவிகளுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, ஊராட்சி மன்ற தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவி உள்ளிட்ட காலியாக உள்ள 32 பதவி இடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று உள்ள நிலையில் திமுக அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.



 

திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் சாவித்திரி என்பவருக்கு ஆதரவாக அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் செந்தில், மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேட்பாளர் பொதுமக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதேபோன்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுபஷி அவர்களுக்கு ஆதரவாக திமுக ஒன்றிய செயலாளர் தேவா உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பள்ளிவாரமங்கலம் பகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரம் வழங்கி தங்களுக்கு வாக்களிக்கும்படி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேபோன்று கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 18வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் தாழை உமாமகேஸ்வரி என்பவருக்கு ஆதரவாக திமுக மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் எருக்காட்டூர் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் 32 பதவி இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிக்கும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.