தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பெற்றோரை வெட்டி கொன்று விட்டு சர்வ சாதாரணமாக வீட்டில் வசித்த மனநிலை பாதித்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலை கிடைக்காததால் மனநலம் பாதிப்பு:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தில்லையம்பூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவரது மனைவி லட்சுமி (73). இவர்களுக்கு கீதா என்ற மகளும், ரவிச்சந்திரன், ராஜேந்திரன் என்ற இரு மகன்கள். இதில் மூத்த மகன் ரவிச்சந்திரன் மின்சார வாரியத்தில் பணியாற்றிய நிலையில் இறந்துவிட்டார். மகள் கீதா திருமணமாகி இறந்துவிட்டார்.
ரவிச்சந்திரனின் மனைவி சேலத்தில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் பட்டதாரியான ராஜேந்திரன் தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் சற்று மனநிலை பாதித்த நிலையில் தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் ராஜேந்திரன் அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
வெட்டிக்கொலை:
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றோரிடம் ராஜேந்திரன் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன் அரிவாளால் பெற்றோரை தலையில் வெட்டி கொன்று விட்டு சர்வ சாதாரணமாக இருந்துள்ளார். தொடர்ந்து கோவிந்தராஜ், லட்சுமி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் வெளியில் வந்துவிட்டு செல்லும் தம்பதியை இரண்டு நாட்களாக பார்க்கவில்லை என்பதும், மேலும் கோவிந்தராஜ் வீட்டிலிருந்து, வந்த துர்நாற்றம் ஆகியவை அக்கம் பக்கத்தினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் பட்டீஸ்வரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கெண்டனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கோவிந்தராஜ், லட்சுமி ஆகியோர் உடல்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்துள்ளது. மேலும் தலையில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.
கைது:
இதையடுத்து தஞ்சாவூரிலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு ஓடி மீண்டும் வீட்டுக்குள் வந்து நின்றது. மேலும் தஞ்சாவூர் மாவட்ட தடயவியல் உதவி இயக்குநர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பட்டீஸ்வரம் போலீஸார் கொலை வழக்குப்பதிந்து, கோவிந்தராஜ், லட்சுமி ஆகியோரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோவிந்தராஜின் மனநிலை பாதித்த மகன் ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: Railway Announcement: செங்கோட்டை வழியாக தாம்பரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்! முழு விபரம் உள்ளே...!